அம்பை சர்வசாதாரணமாக பேசப்பட்ட யதார்த்தத்தை துளைத்து பார்த்து ஆராய்ந்து அன்றாட வாழ்வின் பௌதிக விவரங்களை அந்நியப்படுத்தி காண்பிக்கிறார். தாமிரபரணி ஆற்றோரத்து கிராம பெண்ணொருத்தி நாள்தோறும் செய்யும் வேலைகள் எருமை மாட்டிற்கு தீனி இடுதல், தோசைக்கு மாவு அரைத்தல், இட்லி சுடுதல் ,வீட்டில் புருஷர்கள் தும்மினாலும் இருமினாலும் இதோ என்றும் மிளகு சீரக பொடித்து சுடு தண்ணீர் தயார் செய்தல் - அம்பையின் பார்வையில் ஒரு யுகத்தின், பல யுகங்களின் மண்டி கிடந்து மழுங்கிப்போன சரித்திரமாக, சோற்று மணத்தின் வரலாறாக, பின்கட்டு உலகின் யுகக் குறிப்பாக உருமாறுகின்றன. அந்நியப்படுத்தப்பட்ட எதார்த்தத்தை வடிவமைக்கும் மொழியும் தனது மரபுக்கு அன்னியமான விஷயங்களைப் பற்றி பேச முற்படுகிறது. பெண்களின் பாலுணர்வு, அவர்கள் தங்கள் உடல்களை பற்றி கொண்டுள்ள சுயஉணர்வு - இவை ஒரு புறம். மற்றொரு புறம், மொழி, பெண்ணின் பிறக்ஞை புற உலகுடன் கொண்டுள்ள தனிப்பட்ட தொடர்பை, இந்த தொடர்பினால் உண்டாகும் புரிதலை தாண்டியும் இயங்குகிறது. மரபாக ஆண் வழி சமூகத்திற்கு அர்த்தங்கள் கற்பிக்கும் , கற்பித்துவரும் மொழியின் வரம்புகள் மீறப்படுகின்றன.
Beletrystyka i literatura