"துரோகத்தில் கூட ஒரு கிராம் பத்து கிராம் என்று அளவு உண்டா ? என்று வாசகர்கள் யோசிக்கலாம். ஒரு பெரிய பாறையை உடைப்பதற்கு சிறிய உளி ஒன்று போதும். அதேபோல் ஒரு பெரிய அணைக்கட்டு உடைவதற்கு ஒரு சிறிய விரிசலும் ஒரு குடம் தூய்மையான பால் ஒரு துளி விஷத்தால் விஷமாக மாறவும் போதுமானது. அதேபோல் நல்ல நட்பும், இனிய உறவுகளும் முறிந்து போக ஒரு சிறிய துரோகம் போதும். இந்த நாவலில் ஒரு கிராம் துரோகம் என்ன என்பது நாவலின் கடைசிப் பகுதியை நீங்கள் கேட்கும்போதுதான் தெரியும். கதையின் மையக்கரு ஒரு விஞ்ஞான விஷயம்தான். அது சோலார் எனர்ஜி சம்பந்தப்பட்டது. இன்றைய விஞ்ஞான யுகத்தில் சோலார் எனர்ஜியை உபயோகப்படுத்தி எத்தனையோ அதிசயங்களை விஞ்ஞானிகள் நிகழ்த்திக் கொண்டு இருக்கிறார்கள். அப்படியொரு அற்புதம் இந்த நாவலிலும் நிகழ்த்தப்படுகின்றது. இந்த விஞ்ஞான த்ரில்லர் நாவலில் உள்ள இன்னொரு சிறப்பம்சம் க்ரைம் ப்ராஞ்ச் ஸ்பெஷல் ஆபீஸர் விவேக் நாவலின் ஆரம்ப அத்தியாயத்திலிருந்து கடைசி அத்தியாயம் வரைக்கும் வருகிறார். அவர் குற்றவாளிகளை நோக்கி நெருங்க வகுக்கிற வியூகங்கள் கேட்க வாசகர்களைத் திகைக்க வைக்கும். ஒட்டுமொத்த நாவலும் டெல்லியோடு சம்பந்தப்பட்டது என்பதால், டெல்லிக்கு போய்விட்டு வந்த உணர்வும் வாசகர்களுக்கு ஏற்படும் என்பது உறுதி."