"காற்றும் கனலும் கலந்தாற்போல் ஒரு பேரொளி அங்கு தோன்றியது. பஞ்ச பூதங்கள் அதனுள் ஒடுங்கின. தேவர்களும் சப்த ரிஷிகளும் ஒடுங்கினார்கள். அதுவரை யாரும் கேட்டறியாத ஒரு பிரம்மாண்ட சீற்றத்தின் ஒலி, சுருதியைப் போல் வெளியெங்கும் பரவி நிறையத் தொடங்கியது. அபூர்வமாக, அந்த ஒலிக்கு மணம் இருந்தது. அதைச் செவிகள் உணர்ந்தன. அது துளசியின் மணத்தை ஒத்திருந்தது. அது அசைந்தது. அசையாமலும் இருந்தது. தோன்றிய பேரொளியின் நடு நெற்றியில் இருந்து அந்த ஒலி வந்துகொண்டிருப்பதை உணர முடிந்தது. சட்டென்று அந்த ஒளிப் பிரளயம் ஒரு பெரும் நாகமாக உருக்கொண்டது. பிரம்மாண்டமான அதன் சிரம் சரசரசரவென இரு புறமும் பெருகி சஹஸ்ரமானது. அந்த ஆயிரம் தலைகளுக்குள் இருந்தும் ஒரே சமயத்தில் நாக்குகள் வெளியே நிண்டன. 'ம், ஆரம்பியுங்கள்!' சீற்றத்தின் ஒலி சொற்களாக உருக்கொண்டன. ஆயிரம் தலைகளும் அகண்டு திரண்ட பெரும் தேகமும் கூர் விழிகளும் த்வய சித்தமுமாகப் பாற்கடலில் பரமனின் பீடமாகக் கிடக்கிற ஆதிசேஷன். ராமாவதாரத்தில் அவர் லட்சுமணனாக வந்து நின்றார். கிருஷ்ணாவதாரத்தில் பலராமனாகப் பிறப்பெடுத்தார். கலியின் தொடக்கத்தில் நம்மாழ்வாராகப் பெருமான் பிறப்பெடுக்க முடிவு செய்தபோது புளிய மரமாக முன் தோன்றி, அவர் தங்க நிழல் அமைத்தார். 'பொலிக பொலிக!' என்று நம்மாழ்வார் வாயால் அடுத்த அவதாரத்துக்கான சூசகம் வெளிப்பட்டபோது, 'இதோ புறப்பட்டுவிட்டேன்' என்று ராமானுஜராக வந்து உதித்தார்.... இது உடையவர் ராமானுஜரின் சிலிர்ப்பூட்டும் வாழ்க்கைச் சரிதம். அவரது ஆயிரமாவது திருநட்சத்திரக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தினமலர் நாளிதழில் 108 நாள்களுக்குத் தொடர்ந்து வெளியாகி லட்சக்கணக்கான வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்றது."