புயலிலே ஒரு தோணி' நாவலின் நாயகன் பாண்டியன் பற்றிய ப.சிங்காரத்தின் புனைவு, கெட்டிதட்டிப்போன தமிழர் வாழ்க்கையின்மீது வீசப்பட்ட பெரிய பாறாங்கல். பொதுப்புத்தி, மதிப்பீடுகளைச் சிதைக்கின்ற பாண்டியன் அடிப்படையில் சாகசக்காரன், புரட்சிக்காரன், கலகக்காரன். பூகோளத்தின் மீதான பிரமாண்டமான அனுபவங்கள் குறித்து உற்சாகத்துடன் கிளர்ந்தெழும் பாண்டியனுக்கு எதுவும் பொருட்டல்ல. சாகசச் செயலில் ஆர்வம், தொடர்ந்து மது அருந்துதல், நிறைய பெண்களுடன் தொடர்பு, மரணம் குறித்து அக்கறையின்மை, இடம் பெயர்தல், பரபரப்பான மனநிலை ஆகியன பாண்டியனின் இயல்பாக உள்ளன. தமிழில் இதுவரை எந்த நாவலாசிரியரும் தொட்டிராத சிகரத்தினைத் தனக்கான புதிய மொழியின் வழியே ப.சிங்காரம் அடைந்துள்ள சாதனை, தனித்துவமானது. புயலிலே ஒரு தோணி நாவல், தலைப்பினுக்கேற்ப கதையாடலில் அங்குமிங்கும் இடைவிடாமல் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. சிம்பனி இசைக்கோர்வை போல நாவலின் கதைப்போக்கினில் பல்வேறு கதைக்கருக்கள், தோன்றி, வளர்ந்து மறைந்து, மீண்டும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. அவை வாசகனை வெவ்வேறு தளங்களுக்கு முடிவற்று இழுத்துச் செல்கின்றன.
Grož. ir negrož. literatūra