அலிகளைப் பார்க்கும் போதெல்லாம் என் மனம் அலைக்கழிந்தது.இவர்களை வைத்து தனியாக ஒரு நாவல் எழுதி அப்படியே பிரசுரிக்க வேண்டுமென்று, ஓர் எண்ணம் ஏற்பட்டது. இதற்காக சென்னை துறைமுகத்திற்கு அருகே 'சேரிக்குள் சேரியான' சாக்கடை பகுதிக்குள் வாழும் அலிகளைச் சந்திக்கச் சென்றேன். ஆரம்பத்தில் என்னை 'பகடி' அதாவது 'கபடதாரி' என்று நினைத்து அவர்கள் பேச மறுத்தார்கள். கால் மணி நேரத்தில், அவர்கள் மீது நான் கொண்டிருக்கும் ஆத்மார்த்தமான மனிதநேயத்தைப் புரிந்து கொண்டனர். ஒவ்வொரு அலியும், தத்தம் சோகக் கதையான சேலை உடுத்தல், சூடுபடல், குடும்பத்திலிருந்து பிரிதல், ஐம்பது ரூபாய்க்கு சோரம் போதல், போலீஸ் சித்ரவதை போன்றவற்றைக் கண்ணீரும் கம்பலையுமாகத் தெரிவித்தார்கள். இவர்களை மட்டும் அலிகளின் பிரதிநிதிகளாக எடுத்துக் கொள்ளாமல், வடசென்னையில் காய்கறி வியாபாரம் செய்யும் அலிகளையும் சந்தித்தேன். வீட்டோடு லுங்கி கட்டி வாழும் அலிகளையும், பம்பாய், சென்னை நகரங்களில் இருந்து விடுமுறையாக வந்த அலிகளையும் கண்டேன். அவர்களின் கதைகளையும் கேட்டேன். நினைத்துப் பாருங்கள் - பதினாறு வயதில் - குடும்பத்தோடு ஒட்டி இருக்க வேண்டிய பருவத்தில், ஒரு மனிதப் பிறவியை சூடு போட்டு துரத்தினால் அந்தப் பாழும் மனம் என்ன பாடுபடும்.