Aakasa Veedugal - Audio Book

Pustaka Digital Media
Audiobook
6 hr 3 min
Unabridged
Ratings and reviews aren’t verified  Learn More
Want a 36 min sample? Listen anytime, even offline. 
Add

About this audiobook

'ஆகாச வீடுகள்' நாவலைப் படித்து முடித்தவுடன், அண்மைக் காலத்தில் தமிழில் வெளிவந்துள்ள சிறந்த நாவல் ஒன்றைப் படித்த மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. 'தினமணி கதிரில்' இது வெளிவந்தபோது எனக்குப் படிப்பதற்கு ஓய்வு கிடைக்கவில்லை. மேலும் இப்போது வெளிவரும் பல தொடர்கதைகள் வாழ்க்கையோடு சிறிதும் தொடர்பற்றவையாகவும் நுனிப்புல் மேய்பவையாகவும் இருக்கின்றன. 'பத்திரிகைகளில் இன்று தொடர் கதைகளாக வருபவற்றில் சிறந்த தரமான படைப்புக்களும் இருக்கின்றன' என்பதற்கு இந்த 'ஆகாச வீடுகள்' ஓர் எடுத்துக்காட்டு.

நகரவாசியாக இன்று விளங்கும் பெண்மணி ஒருவர் கிராம வாழ்க்கையைப் பற்றி எழுதியுள்ள கதை இது. கிராமத்தின் ஒரு பகுதியான அக்ரஹாரத்தின் கதை. அக்ர ஹாரத்தில் வாழ்ந்துவரும் ஒரு குடும்பத்தை மையமாக வைத்துக்கொண்டு, அந்தக் குடும்பத்தோடு பழகும் வேறு சில குடும்பங்களின் நிலையையும் வெகு நுணுக்கமாகச் சித்தரித்திருக்கிறார்.

"பச்சை வயல்களும், பட்சிகளும், நதியும் இருக்கிற இடத்திலே வாழற மனசிலே கல்மிஷமே இருக்க முடியாது. பட்டணத்து ஜனங்களுக்கு மனிதத் தன்மையே போய்விட்டது. ஆன்மாவே இல்லாத வெறும் கூடுகள் மாதிரி போய்விட்டது. இயற்கைக்கு நடுவில் இருப்பவர்களுக்குத்தான் மனசிருக்கும்... அன்பிருக்கும்... காருண்யம் இருக்கும்... உன்னைக் கிராமத்திலே நிலபுலன்களைப் பார்த்துக்கற ஒரு பையனுக்குத்தான் கொடுக்கப்போறேன்” என்ற லலிதாவின் அப்பா, அப்படியே கான்வெண்டில் நகரத்தில் படித்த தம் பெண்ணை ஒரு கிராமவாசியான சபேசனுக்குக் கொடுக்கிறார்.

சபேசன் பி.ஏ. படித்தவன். நில புலன்கள் உள்ளவன். கொஞ்சம்கூட டாம்பீகம் இல்லாதவன். குடி, சீட்டாட்டம், பிற பெண்களோடு பழக்கம் இல்லாதவன். ஆனால்?

ஆனால்?- இந்த 'ஆனால்?' தான் ஆகாச வீடுகளின் அடித்தளம்.

இன்றைய கிராமத்துக்கு, குறிப்பாக அதன் அக்ரஹாரத்துக்கு, ஆன்மா இருக்கிறதா? இயற்கை அழகின் நடுவிலிருப்பவர்களுக்கு மனம் இருக்கிறதா? அன்பிருக்கிறதா? காருண்யம் இருக்கிறதா? அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? கிராமத்து ஆண்களின் நிலை என்ன? பெண்களின் நிலை என்ன? குழந்தைகளின் நிலை என்ன? வாழ்க்கை அங்கே எப்படி இருக்கிறது?

அந்த ஒவ்வொரு வீட்டின் ஒவ்வொரு பயங்கரக் கதையையும் இதில் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் திருமதி வாஸந்தி. சபேசன்-லலிதா குடும்பத்தின் கதைபோல் இது தோன்றினாலும், வேறுசில குடும்பங்களின் கதைகளும் ஊடும் பாவும்போல் வெகு இயற்கையாக இதில் பின்னிப் பிணைந்துள்ளன. இந்த நாவலில் நான் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது இதில் உள்ள பாத்திரப் படைப்புத்திறன். துண்டு துண்டாக, தனித்தனியாக, அவரவருக்கே உரிய பண்புகளோடும் பண்புக் குறைவுகளோடும் அவர்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சபேசன்-லலிதா தம்பதியரின் ஒரே மகன் ராஜு. ஓரளவு மனவளர்ச்சியற்ற பையன்தான் அவன். ஆனால் என்ன அற்புதமான படைப்பு அது! தாய்மை உள்ளத்திலிருந்து பிறந்த அந்தக் குழந்தை நம்மால் எளிதில் மறக்க முடியாதவனாக மாறிவிடுகிறான். அவனுக்காக நாம் பதைக்கிறோம்; துடிதுடிக்கிறோம்; கண் கலங்குகிறோம்; கடைசியில் நீண்ட பெருமூச்சு விடுகிறோம்.

புதிதாக அந்தக் கிராமத்தில் வந்து தங்கி, அங்கே ஒரு மருத்துவமனை தொடங்க விரும்பும் இளைஞன் ஹரிஹரன் வாயிலாகவும், அந்தக் கிராமத்திலேயே ஒரு பள்ளிக்கூடத்தை நடத்தத் துணிந்த மீனுவின் வாயிலாகவும் நாம் இரு நம்பிக்கை நட்சத்திரங்களின் ஒளியைத் தரிசிக்கிறோம். எதிர்காலத்தில் நம்பிக்கையோடுதான் நாவல் நிறைவு பெறுகிறது.

ஆனால் படித்து முடித்த பின்பும் நம்மிடம் நல்லுணர்ச்சிகளையும், நற்சிந்தனைகளையும் தூண்டிவிடும் நாவல் இது. புற அழகில் மூழ்கியுள்ள கிராமத்துத் தெருவின் அகத்தோற்றத்தை நமக்கு எடுத்துக் காட்டும் முயற்சி. இதில் இவர் முழு வெற்றி பெற்றிருக்கிறார்.

திருமதி வாஸந்தி இனிய எளிய மொழிநடையில் எழுதுகிறார். பாத்திரப் படைப்புக்களை அவர்கள் சொற்கள் வாயிலாகவும் செயல்கள் வாயிலாகவும் பளிச்சென்று துலக்கிக் காட்டுகிறார். கதைப் பின்னலில் செயற்கைத் தன்மையில்லை. எல்லாம் இயல்பாக நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளே. வெளிப்படையாக அவர் எங்கும் ஓங்கிய குரல் எழுப்பவில்லையென்றாலும், இந்தக் கதையின் வாயிலாக அவர் வாயில்லாப் பூச்சிகளான கிராமத்துப் பெண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் போராடும் துடிப்புக் கொண்டவர் என்பதை நிரூபிக்கிறார்.

மீண்டும் சொல்கிறேன்: நான் அண்மைக்காலத்தில் படித்த நாவல்களில் எனக்கு மன நிறைவைத் தந்த உயிர்த் துடிப்புள்ள நாவல் இது. ஆசிரியை திருமதி வாஸந்தி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

அன்புள்ள, அகிலன்.

About the author

மைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.

கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.

பெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

பஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.

சமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.

Rate this audiobook

Tell us what you think.

Listening information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can read books purchased on Google Play using your computer's web browser.