இது ஒரு மனிதனின் கதை. காலம், தெய்வமாய் மாற்றிய ஒரு மனிதனின் கதை. கி மு 1900. இன்றைய இந்தியர்கள், சிந்து சமவெளி நாகரீகம் என்று தவறாகக் குறிப்பிடும் பகுதி. அன்று வாழ்ந்தவர்களோ, அந்த நிலப்பரப்பை மெலூஹா என்றழைத்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன், உலகின் மிகச் சிறந்த அரசர்களுள் ஒருவரான இராமபிரான் உருவாக்கிய ஏறக்குறைய அற்புதமான சாம்ராஜ்யம். ஒரு காலத்தில் புகழும் பெருமையுமாய் சிறந்து விளங்கிய இதன் ஆட்சியாளர்களான சூர்யவம்சிகள், பல ஆபத்துக்களைச் சந்திக்கின்றனர். அவர்களது ஜீவநதி சரஸ்வதி, வற்ற ஆரம்பித்து, முற்றுமாய் அழியத் துவங்கிவிட்டது. கிழக்கே வாழும் சந்திரவம்சிகளிடமிருந்து, பயங்கர தீவிரவாதித் தாக்குதல்களையும் சந்திக்கின்றனர். நிலைமையை இன்னும் சிக்கலாக்கும் விதமாய், சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டு, விகாரமடைந்த முகமும் உடலுமாய், பல அற்புத சக்திகள் படைத்த நாகர்கள் என்னும் குலத்தாருடன் சந்திரவம்சிகள் கைகோர்த்துக் கொண்டது போலவும் தெரிகிறது. இப்போது சூர்யவம்சிகளின் ஒரே நம்பிக்கை, என்றோ அவர்களிடையே பரவி, வேரூன்றிவிட்ட ஒரு ஆருடம்: 'தீமை தலை விரித்தாடும் போது; அதன் கொடூரம் எல்லை மீறி, எதிரிகள் முழுமையாய் வென்றுவிட்டார்கள்; இனி, போக்கிடம் இல்லையென்ற நிலையேற்படும்போது - ஒரு வீரன் வருவான்.' சிவா முத்தொகுதியில் இதுவே முதல் புத்தகம். சாதாரண மனிதன் ஒருவனின் பிறவிப்பயன், அவனை நம் தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாய், மகாதேவராய் மாற்றிய கதை.