சென்னை கார்ப்பரேஷனின் மூன்றாவது நூற்றாண்டையொட்டி ஒரு சிறப்பு மலர் வெளியிடப்பட்டிருந்தது. அதில் ஒரு கட்டுரையில், சென்னை நகரில் அடிமை வியாபாரம் நடந்ததாக ஒரு கட்டுரை படித்தேன்.
எம்.எஸ். சுப்பிரமணிய ஐயர் என்பவர் அந்த நாளில் சின்னச் சின்ன வாக்கியங்களில் விறுவிறுப்பாகக் கதை கட்டுரைகள் எழுதி வந்தார். அவருடைய நடை என்னை மிகவும் கவர்ந்தது.
எடிட்டர் எஸ்-ஏ. பி. அவர்கள் 'The Man From Rio' என்ற ஆங்கில படத்தைப் பார்த்துவிட்டு வந்து, அதில் வரும் உல்லாசமான, உற்சாகமான, ஆபத்துக்களைச் சிரித்துக் கொண்டே எதிர்நோக்கும் ஹீரோவைப் போல 'அடிமையின் காதல் ' கதாநாயகனைப் படைக்கும்படி யோசனை சொன்னார். இவை எல்லாமாகச் சேர்ந்ததுதான் ''அடிமையின் காதல்''
முதல் இரண்டு மூன்று அத்தியாயங்கள் வரை கதாநாயகனுக்குச் சரியான பெயர் கிடைக்காமல் காஞ்சிபுரத்தான் என்று குறிப்பிட்டு வந்தேன். பிறகு அதையே நிரந்தரமாக வைத்து விட்டேன். தி.மு.க. கட்சியும் அறிஞர் அண்ணாவும் ஆட்சிப் பீடத்தை நெருங்கிக் கொண்டிருந்த சமயமாகையால் 'காஞ்சிபுரத்தான்' என்ற பெயருக்கு மவுசு கூடியது.
- ரா.கி. ரங்கராஜன்
ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.
- கல்கி
'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.
- சுஜாதா