Athimalai Devan - Part 3

· Pustaka Digital Media
E-book
774
Páginas
As notas e avaliações não são verificadas Saiba mais

Sobre este e-book

ஆன்மிக ஞானத்தைப் பெற இமயமலைச் சராலுக்குத்தான் செல்ல வேண்டுமா? துறவறம் ஏற்பதற்குத் தவசியாகத் தனிமையைத்தான் நாட வேண்டுமா? மனநிம்மதியைப் பெறுவதற்கு புனிதப் பயணங்களைத்தான் மேற்கொள்ள வேண்டுமா? இவை ஒன்றையும் செய்யாமல், கடந்த ஆறு மாத காலமாக ஒரு துறவியாக மனநிறைவையும், மனநிம்மதியையும் நான் பெற்றுள்ளேன். ஒரு சரித்திரப் புதினம் குறிப்பாகப் பல்லவர்களைப் பற்றி ஒரு வரலாற்றுப் புதினத்தை எழுதினால் போதும். ஒரு மனிதன் பண்பட்டுவிடுவான். வாழ்க்கையில் உள்ள நெளிவு சுளிவுகளை அறிந்து, நமது வாழ்க்கை எவ்வளவு அநித்யமானது என்பதைப் புரிந்து கொண்டு, தனது ஓட்டினுள் ஒடுங்கும் ஆமையைப் போன்று தனது இந்திரியங்களைச் சுருக்கிக் கொண்டு, பற்றற்ற வாழ்க்கையில் நிலைத்திருப்பான். காரணம், பல்லவ அரச குடும்பத்தில் அவ்வளவு சோகங்கள், மர்மங்கள்!

அரசியல் ஆர்வம், திரைப்பட மோகம் என்று இருந்த காலம் போய், அத்திமலைத்தேவன் புதினத்தை எழுதத் துவங்கிய பிறகு, தனி உலகத்திற்குப் போய்விட்டேன். எல்லாவற்றிலும் ஆர்வத்தை விட்டுவிட்டேன். பல்லவத்தைக் கடைந்த போது, எனக்குக் கிடைத்த தகவல்கள், சம்பவங்கள் என்னைப் பெரும் பிரமிப்பினில் ஆழ்த்திவிட்டன.

தேசத்தின், கலாசாரத்தின் பெருமைகளை அறியாத ஒரே இனம் நமது தமிழர் இனம் என்றுதான் சொல்வேன். இன்று தமிழ் உணர்வைப் பற்றி ஓங்கிப் பேசும் எவரும், தமிழர் சரித்திரங்களைப் பற்றிச் சிறிதுகூடக் கவலைப்படவில்லை. அதைப் பற்றி இம்மியும் யாரும் கவலை கொள்ளவில்லை. தமிழரின் பெருமைகளுக்கு அடையாளமாக உள்ள சின்னங்களை அழிய விட்டுவிட்டு, தமிழர் பெருமைக்கு அரசியல்வாதிகள் உதட்டசைவு (Lip Service) மட்டுமே செய்து வருவது வருத்தத்திற்குரியது.

அதே போன்று, சோழர்களும், பாண்டியர்களும் தான் தமிழை வளர்த்தார்கள் என்று கூறுபவர்களைக் கிணற்றுத் தவளைகள் என்றுதான் கூற வேண்டும். காஞ்சியின் முக்கூடல் கடிகை தமிழின் விளைநிலமாக இருந்திருக்கிறது. உலக நாடுகளுக்கு மன்னர்களைத் தயார் செய்து அனுப்பியுள்ளது, முக்கூடல் கடிகை.

பல்லவக் காஞ்சியின் நாகரிகம், மன்னர்களின் தெய்வபக்தி, இவை அனைத்துமே நம்மை உருகிப் போகச் செய்கின்றன. பாலாறு, செய்யாறு, வேகவதி, கொசத்தலை ஆறு என்று எத்தனை ஆறுகள் வட தமிழகத்தில் பாய்ந்திருக்கின்றன. இன்று பிளாஸ்டிக் குடங்களுடன் மக்கள் அல்லாடுவதைக் காணும் போது மிகவும் வேதனையாக உள்ளது.

எழுத்தாளர்கள் மலிந்துவிட்டார்கள். குறிப்பாகச் சரித்திரப் புதினங்களை நிறைய பேர் எழுதத் துவங்கி விட்டார்கள். அனைவருமே கல்கியின் பொன்னியின் செல்வனைப் படித்துவிட்டு அதன் தாக்கத்தில் தாங்களும் எழுத வேண்டும் என்று எண்ணி வரலாற்றுப் புதினங்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தவறில்லை....! ஆனால் சரித்திரப் புதினங்களை எழுதும் போது சரித்திர உண்மைகளுக்குப் புறம்பாக, வேண்டும் என்றே எழுதுகிறார்கள். ஆராய்ச்சிகளைச் செய்யாமல், 'நான் எழுதுவதுதான் சரித்திரம்' என்கிற ரீதியில் எழுதுவதால், உண்மைகளைப் பொய்கள் என்றும், பொய்களை உண்மை சரித்திரம் என்றும் வாசகர்கள் நம்பிவிடுகின்றனர்.

சரித்திர எழுத்தாளனுக்குப் பொறுமை மிகவும் அவசியம். ஒரு அரசனைப் பற்றி எழுதும் போது அவனது மனைவியைப் பற்றிய குறிப்பு ஒன்று வருகிறது என்றால், அந்த அரசனின் மனைவியின் பெயர் என்ன, அவள் எந்த நாட்டு இளவரசி என்பதைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அரசனாக இருந்தால் அவன் ஒரு இளவரசியைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது இல்லை. நரசிம்மவர்ம பல்லவன் ஒரு சாதாரணக் குடிமகளைத்தான் திருமணம் செய்து கொண்டிருந்தான். போரில் தோல்வியே காணாத நரசிம்மவர்ம பல்லவன், புலிகேசியையே ஓட ஓட விரட்டியவன், ஒரு சாதாரணப் பெண்ணை எப்படி மணக்கலாம் என்று இவர்களாகவே அந்தப் பெண்ணைச் சேர இளவரசி, சோழ இளவரசி என்று கூறிவிடுகின்றனர். இம்மாதிரித் தருணங்களில் தான் சரித்திரம் குழம்பிய குட்டையாகிவிடுகிறது.

அத்திமலைத்தேவன் இரண்டாம் பாகத்திற்கு நல்ல வரவேற்பு. முதல் பாகத்தைவிட வேகம் அதிகம் என்று பலரும் கூறினார்கள். பெரம்பூர் வரை ஒரு வேகம், அரக்கோணம் வரை இன்னும் அதிக வேகம் என்றுதானே இரயில்கள் செல்லும்.

எவ்வளவு தகவல்கள் என்று இரண்டாம் பாகத்தைப் படித்த அனைவருமே பாராட்டினார்கள். குறிப்பாகக் கம்போடியாவுக்கும் காஞ்சிபுரத்திற்கும் இடையே உள்ள ஆலய ஒற்றுமையைக் குறித்துப் பலரும் தங்கள் வியப்பினைத் தெரிவித்தனர்.

அத்திமலைத்தேவனை ஒரு யாகம் போன்றுதான் செய்து வருகிறேன்.

பல்லவப் பயணம் தொடரும். -

- ‘காலச்சக்கரம்’ நரசிம்மா

Sobre o autor

டி ஏ நரசிம்மன் என்கிற காலச்சக்கரம் நரசிம்மா கடந்த முப்பத்தி ஐந்து வருடங்களாக பத்திரிக்கையாளராக திகழ்கிறார். இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தனது பணியை துவக்கியவர் தற்போது . தி ஹிந்து ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருக்கிறார். சுமார் 15 நாவல்களை எழுதி இருக்கும் இவரது முதல் நாவல் காலச்சக்கரம், வெளியிடப்பட்டு பரபரப்பாக விற்பனையாக, இவரது பெயர் காலச்சக்கரம் நரசிம்மாவாக மாறியது. இவரது ரங்கராட்டினம் நாவலை படித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரை அழைத்து பேசி பாராட்டி, திருவரங்கத்தில் போட்டியிட போவதாக அறிவித்தார். சங்கதாரா , பஞ்ச நாராயண கோட்டம், கர்ணபரம்பரை, குபேரவன காவல், அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா போன்ற இவரது நாவல்கள் இவருக்கு தனி வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளன. தற்போது இவர் எழுதியுள்ள ஐந்து பாகங்களை கொண்ட அத்திமலைத்தேவன் பெரும் பரபரப்புடன் விற்பனையாகி கொண்டிருக்கிறது.

சின்ன திரைகளில் கிருஷ்ணா காட்டேஜ், அபிராமி, அனிதா வனிதா, மாயா போன்ற தொடர்கள் உள்பட பல தொடர்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். சிங்கப்பூர் தமிழ் முரசுக்கு சிறப்பு அரசியல் விமர்சகராகவும் கட்டுரைகள் எழுதி உள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குனரும் நகைச்சுவை வசனகர்த்தா சித்ராலயா கோபு, மற்றும் எழுத்தாளர் கமலா சடகோபனின் மகன் ஆவார். இவரது மகன் ஷ்யாம் திருமலை என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் துணை மற்றும் இணை இயக்குனராகவும், மகள் ஸ்ரீயந்தா இயக்குனர் ராதாமோகனின் காற்றின் மொழி மற்றும் பொம்மை படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளனர்.

குமுதத்தில் தற்போது மூவிடத்து வானரதம் என்கிற சரித்திர தொடர்கதையை எழுதி வருகிறார்.

காலச்சக்கரம் நரசிம்மா அவர்களை [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்

Avaliar este e-book

Diga o que você achou

Informações de leitura

Smartphones e tablets
Instale o app Google Play Livros para Android e iPad/iPhone. Ele sincroniza automaticamente com sua conta e permite ler on-line ou off-line, o que você preferir.
Laptops e computadores
Você pode ouvir audiolivros comprados no Google Play usando o navegador da Web do seu computador.
eReaders e outros dispositivos
Para ler em dispositivos de e-ink como os e-readers Kobo, é necessário fazer o download e transferir um arquivo para o aparelho. Siga as instruções detalhadas da Central de Ajuda se quiser transferir arquivos para os e-readers compatíveis.