இந்த திரைக்கதை 1980-களில் உருவாக்கப்பட்டது. வண்ணநிலவனின் இலக்கிய ஆளுமையும், ருத்ரய்யாவின் கலையாளுமையும் துல்லியமாய் கைகோர்த்ததில் ஜனனித்த ஒரு காதல் காவியம்.
எத்தனையோ புதுமைகளையும், புரட்சிகளையும் செய்து வந்திருக்கிற கமல்ஹாசன் இந்த நிஜசினிமா வெளிவரவும் மூலமாய் இருந்திருந்திருக்கிறார் என்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை. அவர் அப்படித்தான்.
இது யதார்த்தத்திற்கு மிக அருகாமையில் பயணிக்கும் ஒரு திரைக்கதை. எளிய முதலீட்டில் உருவாக்கப்பட்ட படைப்பு. கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா மூவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நூல் பிடித்தாற்போல் அடிமுதல் நுனிவரை கதாபாத்திரத்தின் தன்மையை கடைசி வரை மாற்றிக் கொள்ளாமல் பயணித்திருப்பதென்பது தமிழ் திரையுலகின் ஒரு மௌனபுரட்சி.
பைசைக்கிள் தீவ்ஸ் என்கிற ஒரே ஒரு படத்தின் மூலமாகவே உலகப்புகழை அடைந்த விக்டோரியா டெசிகா போல ருத்ரய்யாவும் இந்த ஒரு திரைக்காவியத்தின் மூலம் தமிழும், தமிழ் திரையுலகமும் இருக்கும் வரை உயிர்த்திருப்பார் என்பதற்கான அத்தாட்சியே இந்த திரைக்கதை. அவன் உணர்ந்த காதலை அவள் அவளின் சூழ்நிலை காரணமாய் தாமதமாய் உணர்கிறாள். அதற்குள் நிகழ்கிற வாழ்கையின் உயிர் ததும்பும் பதிப்பு தான் இந்த படைப்பு.
இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.
டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.
குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.
திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.