பால்யத்தில் பூத்த காதல் ஜீவன் இருக்கிறவரைக்கும் இல்லை அதையும் கடந்தோ ஜீவித்தேயிருக்கும். நேராகவோ, ரகசியமாகவோ உணர்வுகளில் உறைவுகொண்டு அவர்கள் ஜீவிதத்தின் ஜீவிதமாய் நிலைகொண்டுவிடுகிறது.
மறந்துவிட்டு வாழ்வது என்று சொல்வதெல்லாம் பொய்.. அப்பட்ட பொய்.. பொய்களில் நீந்தி நிஜமாய் வாழ்வதாய் நடிக்கும் நாடகமே எங்கெல்லாம் காதல் ஏதோ ஒரு காரணத்தினால் நிறைவேறாமல் போய்விடுகிறதோ அங்கெல்லாம் அரங்கேறி முடிகிறது.
வங்க எழுத்தாளர் சரத் சந்திரரின் கதைக்கு வேதாந்தம் ராகவய்யா எழுதிய திரைக்கதையை அடியற்றி உருவாக்கிய இந்த தேவதாஸ் நாவல் அந்த சிந்தாத்தத்தினை நிரூபிக்கக்கூடிய படைப்பாக உருவெடுத்திருக்கிறதென்பது இதனுள் பயணிக்கையில் பிடிபடும்.
நடிகையர் திலகம் என்று இந்திய திரையுலகில் பட்டம் சூடப்பட்ட ஒரே நடிகையான சாவித்ரி இந்த படத்தில் தான் அறிமுகமானார். சுப்பராமனின் இசை கேட்பவர்களின் இதயத்தை உணர்வின் விளிம்பிற்கு கொண்டுபோய் சிலிர்க்கச் செய்து உணர்வுகளில் ஈரம் வரவழைக்கும் வகையில் மெய்உணர்ச்சியின் உச்சம் தொட்டிருந்தது என சொல்லலாம்.
இந்த படைப்பின் சிறப்பு கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் கடந்தும் தன் காதலின் இளமையை இழக்காமல் அதே வனப்புடன் இருப்பது தான். இதை எழுதிக்கொண்டு வருகையில் எத்தனையோ சமயங்களில் அடக்கமுடியாமல் தனிமையில் போய் அக்கம்பக்கம் பார்த்துவிட்டு பாருவிற்காகவும், தேவதாஸிற்காகவும் கண்ணீர்பூக்களை காணிக்கையாய் உகுத்திருக்கிறேன். இந்த தேவதாஸ் மொழி கடந்து பல மொழிகளில் மறுபடி மறுபடி பிறந்து இறந்து கொண்டிருக்கிறான். இனியும் பிறப்பான். புதிதுபுதிதாய் வெவ்வேறு வடிவங்களில் பிறப்பான். அவன் நினைவில் பாரு இருக்கிறவரை அவன் பிறப்பெடுத்துக்கொண்டே இருப்பான்.
இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.
டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.
குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.
திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.