நம்முன்னே எவ்வளவோ கேள்விகள்!
எல்லாக் கேள்விகளுக்கும் நமக்கு விடை தெரிந்து விடுவதில்லை. தெரிந்திருக்கும் விடைகளுக்குள்ளும் பூரண திருப்தியில்லை.
ஆனால், எவ்வளவு பேருக்கு 'நான் யார்?' என்கிற கேள்விக்கு சரியான விடை தெரிந்திருக்கிறது? நம்மில் எவ்வளவு பேருக்கு நமது இறை தொடர்பான விஷயங்களில் ஒரு தெளிவு உள்ளது? கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொன்னதன் ஆழமான காரணம் எத்தனை பேருக்குத் தெரியும்? பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி என்று எதற்கு இத்தனை தெய்வங்கள்?
அமாவாசை, பெளர்ணமி என்பதெல்லாம் விண்ணில் நிகழும் வழக்கமான நிகழ்வுகள். ஆனால், சில வழிபாடுகளையும், கர்ம காரியங்களையும் இந்த நாட்களில் புரிவது ஏன்?
இந்த இரண்டுக்கும் இடையில் பதினான்கு திதிகள், அன்றாடம் ஒரு நட்சத்திரத்தின் ஆதிக்கம். இதுபோக... ராகுகாலம், எமகண்டம், சித்தயோகம், அமிர்தயோகம், குளிகை காலம் என்றெல்லாம் காலப் போக்குக்கு பிரத்தியேக அடையாளங்கள்! இது எதற்காக? இதனால் மனிதனுக்கு ஆகப் போவதுதான் என்ன?
மனிதன் தன் புத்தியால் சக்கரத்தை கண்டறிந்து பின் வாகனங்களைக் கண்டறிந்து அதனால் பயணம் புரிகிறான். தூரங்களைக் கடந்திட மனிதனுக்கு வாகனம் பயன்படுகிறது. இறைவனுக்கு எதற்கு வாகனம்? அதுவும் விலங்கு, பறவை என்கிற உயிர் வடிவங்களில்?
கோயில்களில் எதற்கு ஸ்தோத்திர துதி? அங்குள்ள கற்சிலைகளுக்கு எதற்கு அபிஷேக, ஆராதனைகள்? ஏன் ஒரு சாரார் விபூதியும், ஒருசாரார் திருமண் காப்பும் தரிக்கின்றனர். வேதியர் என்று தனியே ஒரு பிரிவினர் எதற்கு? அவர்களுக்கு எதற்கு சிகையும், பூணூலும்?
அன்றாட வாழ்க்கை முறையில் வீட்டு பூஜையறையில் விளக்கேற்றுதல், கோலமிடுதல் எல்லாம் எதற்காக? தீபாவளி, பொங்கல், வருடப்பிறப்பு, ஆவணி அவிட்டம், ஆடிப்பெருக்கு, கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி, நவராத்திரி என்று பண்டிகை கொண்டாட்டங்கள் எதற்கு?
அமர்ந்து சாப்பிடும்போது ஏன் கையை ஊன்றக் கூடாது? தூங்கப் போவதற்கு முந்தைய இரவுச் சாப்பாட்டில் ஏன் தயிர் கூடாது? காக்கைக்குச் சோறு வைப்பது ஏன்? வடக்கே ஏன் தலை வைத்துப் படுக்கக்கூடாது? வெளியே கிளம்பிவிட்டவரை வலிந்து அழைத்து, எங்கே போகிறாய் என்று ஏன் கேட்கக் கூடாது?
சாவு விழுந்த வீட்டுக்குப் போய் வந்தால் ஏன் குளிக்க வேண்டும்? மாதவிலக்கான பெண்கள் ஏன் ஒதுங்கி இருக்க வேண்டும்? கோயிலில் உள்ள சாமிக்கு எதற்கு தேர்? அதற்கு மட்டுமே எதற்கு திருவிழா? சுமங்கலிகள் பூச்சூடலாம், விதவைகள் ஏன் சூடக்கூடாது? சடங்குகளின் போது அக்னி வளர்க்கப்படுவது எதற்காக?
மாய மந்திரம், சித்து வேலை, பீதாம்பர ஜாலம் என்பதெல்லாம் என்ன? யந்திரம், தாயத்து, கறுப்புக்கயிறு போன்ற சமாசாரங்களில் ஏதாவது பொருளோ, இல்லை திறமோ உள்ளதா?
விரத நாட்களில் பட்டினி கிடப்பதில் அர்த்தம் உள்ளதா? ஜாதகம், ஜோதிடம் எல்லாம் உண்மையா? பாவம், புண்ணியம் என்றெல்லாம் உள்ளதா? பாவம் செய்தால் நரகம், புண்ணியம் செய்தால் சொர்க்கம் என்பதெல்லாம் மனிதர்களை நெறிப்படுத்துவதற்காக அழகிய பொய்களா.. இல்லை, சத்தியமான உண்மைகளா?
தலைவிதி, தலையெழுத்து இதெல்லாம் என்ன? இறந்தபின் உயிர் எங்கு செல்கிறது? பேய், பிசாசுகள் இருக்கின்றனவா? மறு ஜென்மம் உண்டா? கடவுள் ஏன் எல்லோரும் பார்க்கும் படியாக கண்களுக்கு புலனாவதில்லை?
அடேயப்பா! இப்படித்தான் எத்தனை எத்தனை கேள்விகள்!
இவை அவ்வளவுக்கும் துளியும் ஐயமின்றி விடை தெரிந்தவர்கள் இருக்கிறார்களா? அந்த விடைகள் அப்பழுக்கற்றவையா... அசைக்க முடியாதவையா? தெரியாது!
எல்லோருக்கும் தெரிந்துவிடுவதில்லை.
தெரிந்துவிட இந்த வாழ்க்கையும் விடுவதில்லை. உடன் இருக்கும் சத்ருவாக வயிறு! இதற்கு தீனி போட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். அதன் நிமித்தம் உழைக்க வேண்டியிருக்கிறது. பணம் தேடிப் பறந்து கொண்டே இருக்க வேண்டியுள்ளது.
ஆசாபாசங்கள் வேறு ஆட்டிவைக்க முயல்கின்றன. உயிர் வாழ்வதே பெரும்பாடாக இருக்கிறது. இந்த நிலையில் மேற்காணும் கேள்விகள்தான் எதற்கு? அவற்றுக்கு விடை தெரிந்துதான் ஆகப்போவதென்ன?
எல்லாவற்றுக்கும் விடை தேடித்தான் இந்த தொடரைத் தொடங்குகிறேன். எனக்குக் கிடைத்த விடைகளை உங்களோடு பங்கு போட்டுக் கொள்ளப்போகிறேன்.
விடைதேடி ஒரு யாத்திரையைத் தொடங்குவோம். நாம் அறியப் போகும் விடைகளை நம் பிள்ளைகளிடமும் பகிர்ந்து கொள்வோம். வரும் காலம் என்பது இளைஞர் கைகளில்தானே எப்போதும் உள்ளது! அவர்களை கல்லூரிப் பாடத்திலும் சரி, வாழ்க்கைப் பாடத்திலும் சரி... மேதைகளாக்குவதுதானே கடமை?
- இந்திரா செளந்தர்ராஜன்