ஒரு எழுத்தாளராக இன்று நான் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட இதழ்களில் எழுதி வருகிறேன். அவைகளில் மர்மத் தொடர், குடும்பத் தொடர், ஆன்மீகத் தொடர் என்று பல விதங்கள் உண்டு. ஆனாலும் எனக்கு சமூகத் தாக்கத்தோடு சிந்தித்து எழுதுவதே மிகப்பிடித்த ஒன்றாகும். அதற்கு எனக்கு இந்த "அருள் பொருள் இன்பம்" தொடர் மிகுந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.
ஒவ்வொரு நாளும் நாடு முழுக்க எவ்வளவோ சம்பவங்கள். அதில் நல்லதும் கெட்டதுமாய் பல விதமான தாக்கங்கள். இந்தத் தொடரும் அவைகளை ஒட்டியே இருக்க வேண்டும் என்பதே திரு. பிரபு சங்கர் எனக்குச் சொன்னதாகும்.
குறிப்பாக, நான் எந்த சமூக விஷயத்தைப் பற்றி சிந்தித்தாலும் சரி, எப்படிப்பட்ட கருத்தை அதில் கூறியிருந்தாலும் சரி, அது ஆன்மிகமாக வந்து முடிய வேண்டும் என்று கூறிவிட்டார். அதாவது ஆன்மீக மலரில் இக்கட்டுரைகள் வருவதால், சமுதாயச் சிந்தனைகளை ஆன்மீகத்தோடு பொருத்தி முடிப்பது ஒரு புது வடிவாகவும், சிறப்பாகவும் இருக்கும் என்பது அவர் நம்பிக்கை.
ஆனால், பிரச்சனைக்கேற்ற ஆன்மீக விஷயத்தைப் பிடிக்க நான் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டி வந்தது. அதே வேளையில் அந்த உழைப்பு வீண் போகவில்லை. இத்தொடர் வெளி வந்த சனிக்கிழமைகளில் எனக்கு தமிழகம் முழுவதிலுமிருந்தும் தொலைபேசி அழைப்புகள் வந்து, நான் மிகவே ஊக்கப்படுத்தப்பட்டேன். என் உணர்வுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. என்னுடைய சமூக கோபத்தையும் பல நலன் சார்ந்த விருப்பங்களையும் வெளிப்படுத்த இக்கட்டுரைகள் பெரும் வாய்ப்பளித்தன. ஒரு எழுத்தாளருக்கு சமூக பார்வையும் அதன் மேலான அக்கறையும்தான் மிக முக்கியம். இது இல்லாமல் கற்பனையில் எத்தனை கதைகள் செய்தாலும் அவர்களை காலம் மறந்து விடும். எனவே சமூக பிரக்ஞையோடு உண்மை உணர்வோடு ஒவ்வொரு எழுத்தாளரும் திகழ வேண்டும் என்பது என் பணிவான கருத்து. இந்தக் கருத்தோடு இக்கட்டுரைகளை நான் எழுதிய ஒரு எழுத்தாளனுக்கும் அதுதானே வேண்டும்! இத்தொடர் முடிந்த நிலையில் புத்தகமாக தயாராகும் போது இதற்கான மதிப்புரைகளை சமூக நலத்தில் மிகுந்த அக்கரை கொண்ட சிலரிடம் பெற விரும்பினேன்.
அந்த வகையில் மதுரையில் கம்பன் கழகத்தை நிறுவி ஓசைப்படாமல் தமிழுக்கும் ஆன்மீகத்துக்கும் பெரும் சேவை செய்து வரும் திரு. சங்கர. சீத்தாராமன் என் மனக்கண்களில் முந்தி வந்தார். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாதபடி இவர் செய்த பல கொடைகளை நானறிவேன். கொடையாளியாக மட்டுமன்றி, தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த ஈடுபாடு உடையவராகவும், அதில் மிகுந்த ஆழங்கால்பட்டவராக அவர் இருப்பதும் நான் நன்கு உணர்ந்த விஷயங்கள். எனவே, இந்த நூலை மதிப்பிட மிக ஏற்றவராக இவரைக் கருதினேன்.
அடுத்து என் மனதில் பளிச்சென தோன்றியவர் திரு. எஸ். வி. சேகர் அவர்கள். திரு சேகர் அவர்களோடு கிட்டத்தட்ட ஒரு 25 ஆண்டு கால பழக்கம் எனக்கு. அவரை நகைச்சுவை நடிகராகத் தான் பலருக்கும் தெரியும். ஆனால் இரத்ததானம் செய்வதிலும் அனாதை பிணங்களை உரிய முறையில் அடக்கம் செய்வதிலும் ஓசைப்படாமல் தான தர்மங்கள் செய்வதிலும் அவர் எந்த அளவு ஈடுபாடுடையவர் என்று நெருங்கிப் பழகியவர்களுக்கே தெரியும்.
தமிழக மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து அவர் சிறந்த தொண்டாற்றியுள்ளார். ஆழமான பக்தி. சுலபமாக அணுகமுடிந்த தன்மை. எப்போதும் மகிழ்ச்சியான மன நிலை. பிறரை புண்படுத்தாத நாகரீக நகைச்சுவை உணர்வு என்று சேகரிடம் பளிச்சிடும் விஷயங்கள் பல. மனதில் பட்டதை பளிச்சென்று தெரிந்தவர் முதல் தெரியாதவர் வரை அனைவரிடமும் பேசிவிடும் இவர் தன்மை பலமா பலவீனமா என்று நான் சிந்திப்பதுண்டு. அதேபோல சேகருக்கு இனிதான் பல பெரிய பதவிகளும், கெளரவங்களும் காத்திருப்பதாகவும் நான் கணித்ததுண்டு. அவருக்கும், திரு. சங்கர. சீத்தாராமன் அவர்களுக்கும் நண்பர் பிரபு சங்கருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் என்றும் உரியது.
நன்றி!
அன்புடன்
இந்திரா சௌந்தர்ராஜன்