அதே சமயம் நமது பாரத பூமியில் கடவுளர்கள் ராமனாய், கிருஷ்ணனாய் அவதாரம் எடுத்து மனிதர்களுடன் கலந்து எப்படி வாழவேண்டும் என்பதற்கு உதாரணங்களாகவே திகழ்ந்ததாக நமது இதிகாச புராணங்கள் கூறுகின்றன. அந்த பரமனும் மாமதுரையில் நேராகவே வந்து பல திருவிளையாடல்கள் புரிந்து சென்றதை திருவிளையாடல் புராணம் கூறுகிறது. இப்படி கடவுள் பற்றிய கேள்விக்கான விடைகள் பல தினுசாக இருக்க இத்தொடரில் நான் வேறு வடிவில் அதற்கு விடை தேடி புறப்பட்டேன். இக்கதையின் நாயகன் கடவுளை ஒரு அழகிய கற்பனையாக மட்டுமே கருதுபவன். இறுதிவரை அவன் அப்படியேதான் இருக்கிறான்.
பக்தி என்றால் என்ன? எதற்காக வழிபாடுகள்... கர்ம வினை என்பது என்ன? அது நல்வினை தீ வினை என இரு வகைப்படுமா? போன்ற பலதரப்பட்ட கேள்விகளுக்கு இத்தொடரில் மறைமுகமாக பதில்கள் உள்ளன.
இத்தொடரை செம்மையாக வெளியிட்டு ஆதரித்தது. இதன் ஆசிரியர் திருமதி சீதாரவியை இத்தொடர் எழுதும் காலங்களில் நான் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது.
அமரர் கல்கியின் பேத்தியான அவரிடம் கல்கியின் வீர்யம் அப்படியே இருப்பதையும் இன்றைய ஹைடெக் யுகத்திலும் அவர் சில மானுட நெறிகளை மிகப் பிரதானமாக கருதுவதையும் நன்கு உணர்ந்தேன். வாசக உலகமும் ஏகோபித்த ஆதரவு அளித்தது.
பணிவன்புடன்
இந்திரா செளந்தராஜன்