வேற்று நாட்டில் போய் வேரூன்றி வாழும் நிலையில் புதிய தலைமுறையினரின் நிலை என்ன? இதை மையமாகக் கொண்டு, மக்களின் மனோபாவங்களையும் வாழ்க்கைப் பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்து, பண்பட்ட எழுத்தாளராகிய திருமதி. சிவசங்கரி அவர்கள் ஓர் அற்புதமான சித்திரத்தை உருவாக்கிக் காட்டி இருக்கிறார். 'இனி...?' என்ற நாவலில் அமெரிக்க நாட்டில் தங்கி உயர்ந்த பதவிகளில் பணியாற்றும் இந்தியக் குடும்பங்களின் பிரச்சினைகளை, அவர்கள் மனோபாவங்களை, வாழ்க்கை முறையை ஜன்னல் வழியே பார்ப்பதுபோல் தத்ரூபமாக்கிக் காட்டியுள்ளார். அமெரிக்க நாட்டின் நவீன வாழ்க்கை வசதிகளை விவரிக்கும்போது ஒரு சிறந்த பயண நூலைப் படிப்பது போன்ற பிரமை ஏற்படும் உங்களுக்கு.
வெங்கட் - மைதிலி தம்பதிகளும் அவர்களுடைய இரு குழந்தைகளும்தான் இந்த நாவலின் முக்கியக் கதாபாத்திரங்கள். அதிலும் நாவல் நாயகி பிரச்சினைகளுக்குக் காரணமான மைதிலியின் மகள் கெளரி. அமெரிக்கப் பிரஜையாகிவிட்ட மைதிலி தான் வளர்ந்த தமிழ்நாட்டுக் குடும்பச் சூழ்நிலையை அடிக்கடி 'ஃபிளாஷ் பேக்' பாணியில் நினைவுபடுத்திக்கொள்வது நாவலுக்குச் சுவையூட்டி விறுவிறுப்பைத் தருகிறது. ஆனந்தம் பாட்டியின் கண்டிப்பும் அன்பும் பாசமும் கடமையுணர்வும் தாராள மனப்பான்மையும் பழைமையில் பற்றுக்கொண்ட அந்த நல்ல உள்ளத்தின் நேர்த்தியும் இந்தியப் பண்பாட்டுக்குப் புகழ் சேர்க்கின்றன.
வயதுக்கு வந்துவிட்ட தங்கள் மகள் கெளரியை அமெரிக்க நாகரிகச் சூழலில் இந்தியப் பண்பாட்டுப்படி வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படும் மைதிலி - வெங்கட் தம்பதிகளின் மனப்போராட்டமே 'இனி'யின் ஆணிவேர். இதேபோன்ற பல இந்தியக் குடும்பங்களின் பல்வேறு பிரச்சினைகளும் இந்த ஆணிவேருக்குச் சல்லிவேர்களாக அமெரிக்க மண்ணில் வேர் விட்டுள்ள ஆலமரத்தின் விழுதுகளாக்கி இருக்கிறார் ஆசிரியர்.
“இங்க இருந்து பிழைச்சுக்க, ஆனா இந்தக் கலாச்சாரத்தைப் பின்பற்றாதே - இந்தக் கண்ட்ரியை 'லவ்' பண்ணாதே"ன்னு சொல்றது என்ன ஞாயம்?
'வளர்ச்சி வேணுங்கறவங்க, மாற்றங்களுக்குச் சம்மதிச்சுத்தான் ஆகணும்'
‘பின்னால் நின்ற மரத்தைப் பார்த்தவன் “இது பைன் மரமா, போதி மரமா?" என்று கேட்டான்'.
நாவலில் வரும் ஆசிரியையின் இந்த வசனங்கள் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் பிரச்சினைகளுக்கு முடிவு கூறுவதாக அமைந்துள்ளன.