அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். தாய் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த நாவல் இது. முடிவுற்றதும் கீழ்கண்டபடி கருத்து (8-7-84 இதழில்) எழுதி இருந்தார்கள். 1. ராத்திரி நேரம் போவதே தெரியாது. ‘இது ராத்திரி நேரம்’ கதையும் அப்படித்தான். - செ. குணசேகரன், விஜயபுரம். 2. பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல் என்றாலே எனக்கு அல்வா சாப்பிடுவது போல! ‘இது ராத்திரி நேரம்’ அட்டகாசமான நாவல். - ஆர். அமுதா, வடுகவிருட்சியூர். 3. ப. கோ. பிரபாகரின்,‘இது ராத்திரி நேரம்’தொடர்கதை அவருடைய மற்ற தொடர்கதைகளை விட சிறப்பாக இருந்தது. - மா. வடிவேல், சிதம்பரம். 4. விறுவிறுப்பாகக் கதை எழுதி பன்னிரண்டு வாரங்கள் எங்களைப் பரபரப்பில் ஆழ்த்திவிட்டார் பட்டுக்கோட்டை பிரபாகர். - கோ. சு. சுரேஷ், கோயம்புத்தூர். 5. பட்டுக்கோட்டை பிரபாகரின்‘இது ராத்திரி நேரம்’சஸ்பென்ஸ், கொலை, விறுவிறுப்பு அத்தனையையும் கலந்த ஒரு துப்பறியும் படத்தைப் பார்த்ததைப் போல இருந்தது. இத்தனை சீக்கிரம் கதை முடிந்துவிட்டதா? என்னால் நம்பவே முடியவில்லை. -கோ. பாபு, சின்னச்சேலம். 6. பட்டுக்கோட்டை பிரபாகரின்‘இது ராத்திரி நேரம்’வழக்கமான கதைகளை விட சற்று வித்தியாசமான கதையாக இருந்தது. - துரை. முருகன் திருப்பாச்சேத்தி. 7.‘இது ராத்திரி நேரம்’- பன்னிரண்டு வாரங்கள் சென்றதே தெரியவில்லை. அவ்வளவு விறுவிறுப்புடன் எழுதப்பட்டிருந்தது. - மு. மதிவாணன், அரூர். மேற்கண்ட வாசகர்களின் கருத்துக்களைப் படித்ததும் ஜில்லாகிப் போன பட்டுக்கோட்டை பிரபாகரை - வாசகன் பிரபாகர் மண்டையில் தட்டி... இரு, நான் படித்துவிட்டு சொல்கிறேன் என்றான். படித்து விட்டு கருத்தெழுதினான். ‘இது ராத்திரி நேரம்’- பிரபாகரின் மற்றும் ஒரு துப்பறியும் நாவல். வழக்கத்திலிருந்து மாறுபட்ட கதை, அடடா... அதற்குள் முடித்துவிட்டாரே... பிரமிப்பில் ஆழ்த்திவிட்டார் - போன்ற வுடான்ஸ்களை எழுத நான் தயாராய் இல்லை. ஆர். பிரபாகர், பட்டுக்கோட்டை. பாவி! இனி அவன் கருத்து கேட்பதில்லை என்று தீர்மானம். நீங்கள் படிக்கலாம். நன்றி. ம்... இப்போது படிக்கலாம். பிரியங்களுடன், பட்டுக்கோட்டை பிரபாகர்
Szórakoztató és szépirodalom