வெறும் இந்திரிய ரஞ்சகமான சமாசாரங்களில் தான் ஜனங்களுக்கு அதிகக் கவர்ச்சி இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு இவ்விதமே எழுதுவது சரியல்ல. ஜனங்களுக்கு ஆத்மாபிவிருத்தி தருகிற முறையில் எழுதுவதற்கு இருதய பூர்வமாக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் முனைந்தால் தானாகவே ஜனங்களுக்கு அதில் ருசி பிறக்கும். நம்மையும் உயர்த்திக் கொண்டு நம் வாசகர்களையும் நாம் உயர்த்த வேண்டும் என்கிற கடமை உணர்ச்சியைப் பெற வேண்டும். இவ்விதம் ஆத்ம க்ஷேமம், லோக க்ஷேமம், சாந்தி, சுபிட்சம் எல்லாவற்றுக்கும் மெய்யான சேவை செய்கிற பாக்கியத்தைப் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் பெற வேண்டும்.”
-ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
நமது பத்திரிகையாளர்களுக்கு மேற் சொன்ன அந்த பாக்கியம் லபித்ததோ என்னவோ, ஆசார்ய ஸ்வாமிகள் ஆக்ஞைக்கு ஏற்ப, இயல்பாகவே எழுதுகிறவன் என்கிற முறையில் இந்த மேலான பாக்கியத்தை முழுமையாக அடைந்துள்ளவன் நான். இதன் பொருட்டு நானும், என் சம காலத் தமிழ் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவது இயல்பு.
இந்த ‘ஐயஜய சங்கர’ ஒரு கதை கற்பனை கனவு; ஆனால் பொய் அல்ல; சத்தியம். உங்கள் நடைமுறை வாழ்க்கையை விடவும், நமது நிதர் சனங்களை விடவும், எனது கனவுகளும் கற்பனைகளும், கதையும், மேலான அர்த்தமும் ஆக்க சக்தியும் உடையவை. நான் எழுதுவதுதான் முக்கியமோ தவிர, எந்தப் பத்திரிகையில் அல்லது பனை ஓலையில் எழுதினேன் என்பதால் எழுத்தின் தலைவிதி நிர்ணயிக்கப்படுவதில்லை. எழுத்தின் தலைவிதி எழுதப்படுவதாலேயே தீர்மானமாகிறது... விளைவுகள் நம் அனைவரையும் மேன்மையுறச் செய்யட்டும்.
- ஜெயகாந்தன்