காஞ்சி மாநகரை விஜயனின் விழி வழியாகக் காட்டும் அற்புதக் காட்சிகளை விவரிக்கும் இடங்களில் எல்லாம் விக்கிரமனின் விரல்கள் தூரிகையாகி கண் சிமிட்டுகின்றன.
காஞ்சனாவைக் கண்டு விஜயன் வியக்கும் போது நாம் நம் கண்களைக் கசக்கி விட்டுக் கொள்ளத் தோன்றுகிறது - அந்த வர்ணிப்பில் தமிழ்க் குதிரை குளம்படி ஓசை எழுப்பிக் குதியாட்டம் போடுகிறது.
வாதாபி நகரத்தை சாளுக்கியர்கள் செய்த நாசத்தையும், மாமல்லபுரத்து கடல் ஓரங்களில் பாய்விரித்து கலங்கள் நகர்ந்த பின்னணியையும், விக்கிரமன் வரலாற்று ஆதாரங்களுடன் இந்த நாவல் முழுக்க விவரிக்கும் போது, வரலாறு நிமிர்ந்து நிற்கிறது!
ஆடற் கலையில் வல்லவளான காஞ்சனாவும் ஓவிய விரல்களுக்குச் சொந்தக்காரனான விஜயனும் சந்திக்கும் இடங்களில் எல்லாம் கனவுகளும் கற்பனைகளும் பூட்டிய பொன் ரதத்தில் தமிழ்த்தேர் அசைந்து அசைந்து நகர்கிறது... அழகு... அடடா, ஆனந்த அழகு!
ஓர் இளம் மங்கை எப்படி எல்லாம் ஆட முடியும்?
விக்கிரமன் விவரிக்கிறார்: 'சேவடி நோக ஆடினாள். வளைக்கரம் துள்ள ஆடினாள். மெல்லிடை வருந்த ஆடினாள். கருவிழி சுழல ஆடினாள். இடையும், துடையும், விழியும், இதழும், கரமும், பரதமும் துவண்டு களைத்துச் சாயும் வரை ஆடினாள். அவளை அறியாமல் நிலத்தாயின் நீள்மடியில் மூர்ச்சித்துச் சாயும் வரை ஆடினாள்'. வரலாற்று நாவலின் அழகியலில் நம் மனசை தென்னங்கீற்றாய் அசைய வைக்கும் நன்னடை!
பல்லவ இளவரசன் ராஜசிம்மன், சுந்தரியை வாஞ்சையுடன் நெருங்கும் பொன் அந்தி நேரங்களில் எல்லாம் விக்கிரமன் அவர்களின் எழுத்துகள் நாகரிக ஆடை உடுத்திக் கொள்கிறது. சாளுக்கியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையில் போர் மேகங்கள் சூழுகின்ற தருணங்களில்கூட சிற்பக்கலையையும் ஓவியங்களின் மீதான ராஜபாசமும் நம் கண்முன் விரிகின்றன. மக்கள் சேவை, ராஜபரிபாலனம், போர்த் தந்திரம் இவற்றுக்கிடையே கலைகளைப் போஷித்த பல்லவர்களின் வரலாற்று முக்கியத்துவமும் இந்த 'காஞ்சி சுந்தரி' நாவல் முழுக்கப் பரவிக் கிடக்கின்றன.
கீர்த்தி வர்மன் மாறுவேடம் பூண்டு காஞ்சி மாநகரையும், பல்லவ மன்னர்களின் ஆட்சியையும் சீரழிக்கத் திட்டம் தீட்டி முனையும் போது, அது சுந்தரி, காஞ்சனா என்கிற இரண்டு ஆரணங்குகளால் அடையாளம் காணப்பட்டு, அவனின் கபட வேடத்தைக் கலைத்து, பல்லவ மன்னர்களின் கௌரவத்தைக் காப்பாற்றியது. தனி ஒரு கதையாகவே நாவலுக்குள் ஓரங்கட்டிப் பாய்கிறது!
வரலாற்று நாவல்தான் இது. ஆனால், இதில் ஓர் அற்புதமான மன்னராட்சியின் பின்னணியில் மிகமிக அற்புத லாவகத்துடன் ஒரு முக்கோணக் காதல் கதையைப் பின்னிப் பின்னி நமக்கு காதல் விருந்து சமைத்துத் தந்திருக்கிறார் விக்கிரமன். காஞ்சனையைக் கௌரவமாகவும், நாகரிகமுமாக பார்த்துப் பழகிய ஓவிய விழிக்குச் சொந்தக்காரன் விஜயன். அவனுக்குக் காஞ்சனையின் மீது இருந்தது காதல் அன்று. அன்பின் பெருவிழிப் பயணம். நடன விழிகளும், நர்த்தன உடல் வெளிச்சமும் கொண்ட காஞ்சனாவுக்கு, சிற்ப வதனம் கொண்ட விஜயனின் மீது இருந்ததோ அப்பட்டமான காதல் நதிப்பயணம். ஆனால், விஜயனோ சுந்தரியின் விழிவழிப் பாதையில் நடை பயிலும் ஆசை நாயகன். இவ்வாறான காதல் யாத்திரையில்... 'யார் யாரைக் கரம் பிடிப்பர்...? எவரது நெற்றியில் எவரது மழைநீர் சொட்டு பட்டுத் தெறித்து சதிராடப் போகிறது?' என்கிற ஒரு கேள்வியைச் சுமந்தபடியே படிப்பவரின் நெஞ்சில் சுவாரஸ்யப் பந்தல் போடப்பட்டு, இறுதியில் சுந்தரியையும், விஜயனையும் மனதார வாழ்த்திவிட்டு, எளிமையின் சிகரமாய் காஞ்சனா உருமாறி, புத்த மதத்தைத் தழுவி, புத்த பிக்குவாய் மாறி, தியாக திருவிளக்காக காட்சி தருவது நம்மை நெகிழ வைக்கிறது.
காஞ்சி சுந்தரி... காதலின் சங்கீத ஓசை! சந்தன வாசக் குளிர்ச்சி!
- எஸ்.இராஜேஸ்வரி