நாற்பத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகையாளனாக ஆவதற்கு எனக்கு வாய்ப்பளித்த சாவி சார் அவர்கள் அன்புக் கட்டளையை மீற முடியவில்லை. மேலும் புதினத் தலைப்பை மறுநாளே தரவேண்டும் என்றும் சொல்லிவிட்டார்.
என் இனிய நண்பர் திரு. ஸ்ரீவேணுகோபாலன் சொல்லி வைத்தாற்போல் மறுநாள் காலையில், தொலைபேசி மூலம் நினைவுபடுத்தினார். நான் சுறுசுறுப்பாக இயங்கினேன். பிறந்தது 'மாணிக்க வீணை'
தமிழ்நாட்டிற்கு பரிவாதினி என்ற வீணையை அறிமுகப் படுத்தியவர் புகழ் பெற்ற பல்லவ மன்னர் மகேந்திரவர்மன். அந்த வீணையை எவ்வாறு படைத்தார் என்ற கதையை 'பரிவாதினி' என்ற பெயரில் குறுநாவலாக எழுதினேன். அந்த வீணை என் மனத்தில் ஆழமாகப் பதிந்து விட்டது.
பல்லவர்கள் கண்டெடுத்த பரிவாதினி வீணையின் பிற்கால வரலாறு என்ன என்பதைச் சிந்தித்து வந்தேன். 'சாவி' பத்திரிகையில் தொடர்கதை எழுதும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டேன். திரு. சாவி அவர்களுக்கு நன்றி.
கலைமாமணி கோபுலு அவர்களுடன் கதையைப் பற்றி அவ்வப்போது கலந்து பேசுவேன். அவரது ஊக்கம் எனக்கு உறுதுணையாக இருந்தது.
மலைநாட்டிலிருந்து வந்த சைலேந்திரியும், நரேந்திரனும், முகுந்தனும் ஐம்பத்திரண்டு வாரங்களுக்கு என்னுடனேயே இருந்து கதை வளர உதவினார்கள். அவர்களுக்கும் நன்றி.
- விக்கிரமன்