நண்பர் ராஜேஷ் இந்த அரிதான செயலை மிக லாவகமாக, நிஜமாக்கிய, உலகத்தின் மிகச்சிறந்த திரைப்பட இயக்குநர்களின் வாழ்க்கையைக் கண்ணாடி போட்டு சட்டம் வைத்து நம் வீட்டு வரவேற்பறை ஆணியில் அடித்து நம் கண்ணுக்கு முன் மாட்டியிருக்கிறார் இப்புத்தகத்தில்.
அற்புதமான இயக்குநர்களின் அபூர்வமான படங்களையும், அதை இயக்கி முடிக்க அவர்கள் பட்ட கஷ்ட நஷ்டங்களையும் பார்க்கும் போது, வாழ்க்கையின் பேராட்டம் நமக்கு மட்டும் அல்ல பெவாலிஹில்ஸில் திரிந்த ஸ்டீவன் ஸ்பீலுக்கும் சினிமா மிகப்பெரிய பேராட்டம்தான் என்பது இவர் எழுத்துக்களில் தெளிகிறது.
எனக்கும், நமக்கும் பரிச்சயமான வுடி ஆலன், ஸ்பீல்பெர்க், ஆங் லீ, ஹிட்ச்காக். ஸ்டீவன் சொடர்பர்க் பற்றிய ஆழமான அழுத்தமான விவரங்கள் மட்டுமல்லாமல் அதிகம் பரிச்சயமில்லாத மைக்கேல் கர்ட்டிஸ், ஸ்டான்லி குப்ரிக், ராபர்ட் வைஸ் ஆகியோர் இயக்கிய அற்புதமான படங்களையும் அந்த இயக்குநர்களின் அபரிதமான அறிவு, திறன், எல்லாம் தெரிந்துகொள்ளும் வாய்ப்பை ராஜேஷ் எளிதான தமிழில் நமக்கு பரிசாக்கியது நம் வரப்பிரசாதம்.
10 வருடமே திரையுலகில் திணறித் தடுக்கி, முடிவில் "நான் உழைத்தேன். ஆனால் இந்தத் துறை எனக்கு என்ன கைம்மாறு செய்தது'' என்று சாடுபவர்கள் நடுவில், தன் 30 வருட அனுபவத்தை, ராஜேஷ் இழைத்து ஒரு அரிய, போற்றத்தக்க புத்தகத்தை உருவாக்கியது அவர் முழுமையை முதிர்ச்சியைக் காட்டுகிறது.
60 வருட வாழ்க்கையை 60 நிமிடங்களில் நம் கண்முன் காவியமாக, ஓவியமாக, திரைச்சுருளில் லாவகமாக அடக்கும் பிரம்மாக்கள் இப்புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் இயக்குநர்கள்.
நண்பர் இயக்குநர் சேகர் கபூர் சொல்லுவார், "திரைப்படத்தை இயக்குவது சாதாரண மனிதர்களால் இயலாத காரியம். வெறியும் உழைப்பும், அட்ரீனலின் சுரப்பு நீர் மனிதனைத் தூக்கிச்செல்லும் தன்மையும் மட்டுமே ஒரு திரைப்பட இயக்குநரை இந்த அசாதாரணமானப் பணியைச் செய்ய வைப்பது" என்று.
அதுபோன்ற இயக்குநர்கள் பிறந்த விதம், வளர்ந்த சூழல், அவர்கள் நடந்த பாதை - சந்தித்த பிரச்சினைகள் எல்லாவற்றை அறிந்துகொள்ளும் வாய்ப்பை இப்புத்தகத்தின் வாயிலாகப் பெற்ற நாம், அதிர்ஷ்டசாலிகள்.
ஆண்டிப்பட்டியில் பிறந்த ஒரு இளைஞன், இயக்குநர் கனவுகண்டு மெய்ப்படுவதுதான் பெரிய சாதனை, அவன் அனுபவித்ததுதான் சோதனை என்ற குறுகிய வட்டத்தில் இருக்கிறோம்.
ஆனால் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பிறந்த ரிச்சர்ட் ஆட்டன்பரோ, சிசில் பி-டிமிலி, ஜான் ஃபோர்டு இவர்களும் முட்பாதையும், கற்பாதையும் பெரியவர்களுடைய இழிச்சொல்லையும் கடந்து வந்த நம்மைப்போன்ற சாதாரண மனிதர்கள்தான்.
ஆனால் அசாதாரணத்தை, வெகு சாதாரணமாக சாதனையாக்கி உலகத்தின் மிகச்சிறந்த படங்களை நமக்குத் தந்துவிட்டு ஒரு ஆசிரியரின் இடத்தில் நின்று நமக்கு வாழ்க்கைப் பாடம், படம் வாயிலாக நடத்துகிறார்கள். அவர்களுக்கு நன்றி. எழுதிய நண்பர் ராஜேஷுக்கு வாழ்த்துக்கள்.
சுஹாசினி
திரைப்படக் கலைஞர்
திரைப்படக் கலைஞர் ராஜேஷ் தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர். கன்னிப்பருவத்திலே, அச்சமில்லை அச்சமில்லை , ஆலய தீபம், சிறை, மக்கள் என் பக்கம், நிலவே மலரே, மகாநதி, சத்யா, ஆட்டோகிராப் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது ஆளுமையை வெளிப்படுத்தியவர். திரைப்பட நுணுக்கங்களை நன்கு அறிந்தவர். கலைமாமணி உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.
சிறந்த உலக சினிமாக்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு வெளிவந்துள்ள இந்த நூல் தமிழ் சினிமாவில் சாதனை புரியும் எண்ணம் கொண்ட புதிய தலைமுறையினருக்கு உத்வேகம் ஊட்டக்கூடியது.