கீழ்க்கணக்கு வரிசையில் அகப்பொருள் நூல்கள் ஆறு. அவற்றுள் இரண்டு நூல்கள் 'திணை' என்றும், வேறு இரண்டு 'ஐந்திணை' என்றும் பெயர் பெறுவன. ஐந்திணை ஒழுக்கங்களைக் கோவையாக அமைத்து மாலை போலத் தந்துள்ளமையால் 'திணைமாலை' என்றும், பாடல் அளவினால் 'திணைமாலை நூற்றைம்பது' என்றும், இந்நூல் பெயர் பெற்றுள்ளது. கீழ்க்கணக்கில் அமைந்த ஐந்திணை நூல்களில் அளவால் பெரியது இதுவே. குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என்னும் வரிசையில் ஐந்திணைகளை இந்நூல் முறைப்படுத்தியுள்ளது. திணை ஒவ்வொன்றும் 30 பாடல்களைக் கொண்டுள்ளது. எனினும் குறிஞ்சி, நெய்தல், முல்லைத் திணைகள் மூன்றும் 31 பாடல்களைப் பெற்றுள்ளன. அதனால், இந்நூலில் 153 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந் நூலின் ஆசிரியர் ஏலாதியை இயற்றிய கணிமேதாவியார்.