History of Chera Kings: சேர மன்னர் வரலாறு

·
· Mukil E Publishing And Solutions Private Limited
5.0
2 reviews
Ebook
400
Pages
Ratings and reviews aren’t verified  Learn More

About this ebook

 பதிப்புரை


உலக வாழ்வு வளம் பெறுதற்கு அதன் தொன்மை வரலாறு இன்றியமையாதது. முன்னோர் வாழ்வில் காணப்படும் உயர்ச்சியும் வீழ்ச்சியும், ஆக்கமும் கேடும், நிறையும் குறையும் பின்னோர்க்கு ஆக்கமும் அரணு மாம். நம் நாட்டில் சங்க இலக்கியங்கட்குப்பின் தோன்றி யவை யாவும் விண்ணவர் தேவர் அசுரர் வாழ்வையும் பெருமைகளையும் கற்பனையால் விரித்துக் கூறி, மண்ணவர் வாழ்வையும் வரலாற்றையும் அறவே புறக்கணித்து விட்டன. அதனால் நாம் வாழும் வீட்டைச் சுற்றிலுமுள்ள புல் பூடுகள், மரஞ் செடிகள், புழு பூச்சிகள், புள்ளினங்கள் முதலிய பலவற்றின் பெயர் கூடத் தெரியாமல் இருக்கிறோம். நமது குடும்ப வரலாறு, நாம் வாழும் ஊர் வரலாறு, நாட்டு வரலாறு ஒன்றும் நமக்குத் தெரியாது. தேவாசுரர், முகமதிய ஆங்கிலர் வரலாறுகள் ஓரளவு தெரியுமே தவிர, நம் முன்னோரான குடும்பத் தலைவர், அரசர், செல்வர், பெரியோர் வரலாறும் செயல்வகையும் அறியாமைதான் நமது சமுதாய பொருளாதாரச் சமய வீழ்ச்சிக்குக் காரணம். இவ் வரலாறுகளை வெளியிடும் நோக்கத்தால் இவ் வரலாற்று நூலை வெளியிடுகிறோம். இதனை இதுகாறும் ஆதரித்த அறிஞர் உலகம் தொடர்ந்து ஊக்கம் உறுவிக்கும் என நம்புகின்றோம்.

முன்னுரை


நம் தமிழ் நாட்டின் வரலாறு தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே தொடர்ந்து இயன்று வருவது உலகறிந்த செய்தி; எனினும் அக்கால நிகழ்ச்சிகளை வரன்முறையாக அறிதற் கேற்ற நூல்களும் வேறு குறிப்புகளும் போதிய அளவில் கிடைக்காமையின், சங்க இலக்கியங்கள் எனப்படும் தொகை நூல்களின் பாட்டுகள் தோன்றிய காலத்திருந்து நாம் அறிந்து கொள்ளுதல் ஒரளவு இயலுகின்றது. அக் காலத்தைப் பொதுவாகச் சங்க காலம் என்பது பெருவழக்காய் உளது. அதனால், தமிழ் நாட்டு வரலாறு சங்க காலம், களப்பிரர் காலம், பல்லவர் காலம், இடைக் காலம், பாண்டிய சோழர் காலம், விசய நகர வேந்தர் காலம், முகமதிய ஐரோப்பியர் காலம், மக்களாட்சிக் காலம் என வகுத்துக் காணப்படுகிறது. ஆனால், இம் முறையில் வைத்துத் தமிழ்நாட்டு வரலாறு இன்னும் எவராலும் எழுதப் படவும் இல்லை; அதற்குரிய முயற்சியும் இன்றுகாறும் உருவாகவுமில்லை. தமிழ் மக்கட்கு அறிவியல் வாழ்வில் உண்டான வீழ்ச்சிக்கு இதைவிட வேறு சான்று வேண்டுமோ? -


இனி, சங்க காலம் என்பது தமிழ் நாட்டின் சேர சோழ பாண்டியர் என்ற மூவேந்தரும் வாழ்ந்த காலமர்கும். இக் காலத்தைக் காலஞ் சென்ற திரு. வி. கனகசபைப் பிள்ளை முதல் பலர் ஆராய்ந்து எழுதி யுள்ளனர். களப்பிரார் காலம் இதுகாறும் எவராலும் தெளிவாக விளக்கப்படவில்லை. பல்லவர் காலம்


திரு. துப்ரயில் முதல் திரு. பி.டி. சீனிவாச ஐயங்காரை யுள்ளிட்ட பலரால் ஆராயப்பட்டுள்ளது. இடைக்காலப் பாண்டிய சோழர்கள் வரலாற்றைத் திரு. நீலகண்ட சாத்திரியார் ஒருவாறு ஆராய்ந்து எழுதினாராக, அவரது ஆராய்ச்சிக்கு எட்டாத பலவுண்மைகளைக் கண்டு தெளிவுபடுத்தித் திரு. டி.வி. சதாசிவப் பண்டாரத் தார் அவர்கள் நல்லதொரு வரலாற்று நூலையும் எழுதியுதவியிருக்கின்றார்கள். விசயநகர வேந்தர் அவருக்குப்பின் வந்த நாயக்க மன்னர் ஆகியோரின் வரலாறுகளை டாக்டர் திரு. கிருஷ்ணசாமி ஐயங்காரை யுள்ளிட்ட அறிஞர்கள் ஆராய்ந்துள்ளனர்.


தமிழ் நாட்டின் வரலாறு காண முயன்றோருள் பெரும்பாலோர் பல்லவ சோழ பாண்டிய நாட்டு வரலாறுகளையே மேன்மேலும் ஆராய்ந்தனரே யன்றி, அதன் மேலைப்பகுதியாகிய சேர நாட்டு அரசர்கள் வரலாற்றைக் காண இவ்வாறு முயலவில்லை. இதற்குக் காரணம், இத் துறையில் முயன்றோர் பலரும் சேரநாடு இன்று கேரள நாடாக மாறிவிட்டது கண்டு மயங்கினமையே யாகும். திரு. கே.ஜி. சேவுையர் முதலிய அறிஞர் சிலரே அத்துறையில் கருத்தைச் செலுத்தினர்.


சங்ககாலச் சேரர் இலக்கியங்களை யான் ஆராயத் தலைப்பட்டபோது, சேர நாட்டைப் பற்றிய குறிப்புகளைத் தேடித் தொகுக்கும் கடமை உண்டாயிற்று. அக் காலை, மேனாட்டறிஞரான வில்லியம் லோகன் எழுதியனவும், நம் நாட்டவரான திரு. நாகமையர், திரு. கே.பி. பதுமநாப மேனன், திரு. கேஜி. சேவுையர், திரு. சி. கோபாலன் நாயர் முதலியோர்


எழுதியுள்ள நூல்களும், திருவாங்கூர், கொச்சி, குடகு, தென்கன்னடம் ஆகிய பகுதிகளைப் பற்றிய அரசியல் வெளியீடுகளும் பெருந்துணை செய்தன. பழையங்காடி, உடுப்பி, ஹொன்னாவர், கோழிக்கோடு, கண்ணனூர், பெல்காம் முதலிய பேரூர்களில் வாழ்ந்துவரும் நண்பர்கள் பலர் தெரிவித்த குறிப்புகளும் எனக்கு மிக்க ஊக்கம் தந்தன. அதனால் சேரர் வரலாற்றைக் காண்பதற் கெழுந்த வேட்கை உறுதிப் படுவதாயிற்று. சேரநாடு கேரள நாடாயின. பின், சேர மக்கள் வாழ்ந்த ஊர்களும், அவர்களிடையே நிலவிய ஒழுக்க நெறிகளும் மறைந்து ஒடுங்கினவாயினும், பழங்கால இலக்கியக் கண் கொண்டு நேரில் சென்று காண்போர்க்குப் புலனாகாமற் போகவில்லை.


அவற்றை அவ்வப்போது நேரில் சென்று கண்டும், ஆங்காங்குள்ள அறிஞர்களோடு அளவளாவியும் ஆராய்ந்த போது, அவற்றின் துணை கொண்டு பண்டை நாளைச் சேரமன்னர் வரலாற்றைக் கோவைப்பட வைத்துக் காண்டற்கு வாய்ப்பு உண்டாயிற்று. இந்த என் முயற்சிக்குத் துணைபுரிந்தவர், கோவையில் ஒய்வு பெற்றிருக்கும் வேளாண்மைக் கல்லூரிப் பேராசிரியர் திரு. வேங்கட கிருஷ்ணப் பிள்ளையவர்களும், 1940-41ல் வடவார்க்காடு மாவட்டத்தில் கல்வியதிகாரியாக இருந்த திரு. வீ.கே. இராமன் மேனன் அவர்களுமாவர். தொடக்கத்தில் என்னை இவ்வாராய்ச்சியில் ஈடு படுமாறு துண்டிச் சேர நாட்டு வரலாற்றாசிரியர் சிலருடைய நட்பையும் உண்டுபண்ணுவித்து ஊக்கியவர் என் கெழுதகை நண்பர், அண்ணாமலைப்


பல்கலைக் கழக வரலாற்றுச் சிறப்புடைய ஆசிரியராயிருந்து காலஞ் சென்ற திரு. எஸ்.கே. கோவிந்தசாமிப் பிள்ளையவர்கள். அவர்கள் இந்நூல் வெளிவரும் இந்நாளில் இல்லாமை என் நெஞ்சை மிகவும் வருத்துகின்றது.


கையெழுத்து வடிவில் இருந்த காலத்து இவ் வரலாற்றைக் கண்டு மிக்க மகிழ்ச்சியுடன் ஊக்கம் கொள்வித்த என் பெரு நண்பர்களான திரு. டி.வி. சதாசிவப் பண்டாரத்தார், திரு. வித்துவான், க. வெள்ளைவாரணம் ஆகிய இருவரது நன்றியை என்றும் மறவேன். இதனை ஆர்வமோடு படித்து மதிப்புரைகள் வழங்கிய என் இனிய நண்பர்களான டாக்டர் திரு. எம்.எஸ். வயிரணப் பிள்ளை அவர்களையும், டாக்டர் திரு. மா. இராசமாணிக்கனார் அவர்களையும் நன்றியுணரும் என் நெஞ்சம் ஒருபோதும் மறவாது.


பல்லாண்டுகளாய்ச் சுணங்கிக் கிடந்த இந்த வரலாற்று நூலை வெளியிட்டுதவும் கண்டனூர் சாந்தி நூலகத்தார் நன் முயற்சியினைத் தமிழகம் பெரிதும் ஆதரிக்கும் என்னும் துணிபுடையேன்.


"ஞாலம் நின்புகழே மிக வேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே."


ஒளவை. துரைசாமி.


Ratings and reviews

5.0
2 reviews

Rate this ebook

Tell us what you think.

Reading information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can listen to audiobooks purchased on Google Play using your computer's web browser.
eReaders and other devices
To read on e-ink devices like Kobo eReaders, you'll need to download a file and transfer it to your device. Follow the detailed Help Center instructions to transfer the files to supported eReaders.