ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கலைமகள் இதழ்களில் தொடர்கதையாக வந்த இக்கதையை, நீலகிரி வாழ் மக்களின் வாழ்வை முறையாகக் கண்டு ஆராய்ந்த பின்னரே எழுதினேன்.
பன்னிரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நீலக்குறிஞ்சி பூக்கும் இம்மலைகளில் வண்டுகள் அந்தப் பருவத்தில் பாறை இடுக்குகளிலும் மரக் கொம்புகளிலும் அடையடையாகத் தேன் வைக்குமாம். இந்நாட்களில் குறிஞ்சி பூக்கும் பருவமே தெரியவில்லை. இயற்கை வாழ்வு குலைந்து செயற்கை வாழ்வின் அடித்தள முயற்சி போல் பணத்தைக் குறியாகக் கொண்ட வாழ்வுக்குத் தேவையான தேயிலை - காபியே மலைகளில் நீள நெடுக கண்ணுக்கு எட்டிய வரையில் இடம் கொண்டன. பச்சைத் தேயிலை மணத்தை நுகர்ந்து கொண்டு அந்தக் குறிஞ்சித் தேனின் இனிமையைக் கற்பனையால் கண்டு ஒரு வாழ்வில் நிகழும் மாற்றங்களையும் போராட்டங்களையும் சித்தரிக்க முயன்றிருக்கிறேன். நான் இந்நவீனத்தை எழுதத் துணிந்த நாட்களில் மனித வாழ்வின் நிலையாய ஈரங்களினின்று அகன்று செல்ல வழிவகுக்கும் வாழ்வின் வேறுபாட்டைக் குறியாகத்தான் புலப்படுத்த எண்ணினேன். இன்று அந்தக் கருத்து வருந்தத்தக்க வகையில் அச்சமூட்டும் உண்மையாகப் பரவியிருக்கிறது. எனினும் மனித மனத்தின் இயல்பான ஊற்றுக் கண்கள் அன்பின் அடிநிலையைக் கொண்டதென்று நம்பிக்கை கொள்வோம். நல்ல நல்ல செயல்கள் பயனளிக்க ஒரு தலைமுறைக் காலம் பொறுத்திருக்கலாம் என்பது ஆன்றோர் வாக்கு.
இப்புதினத்தை, கலைமகள் காரியாலயத்தார் நூல் வடிவில் கொண்டு வந்த போது, பேரன்பு கூர்ந்து டாக்டர் மு.வ. அவர்கள் முன்னுரை எழுதிச் சிறப்பித்தார்கள். அச்சிறப்பு, எழுத்துலகில் பேதையாக அடி வைத்திருந்த என்னை, கற்றறிந்த புலவோர் முன் அறிமுகம் செய்து வைக்கும் பெரு வாய்ப்பாக மலர்ந்தது. நான் முன்னும் பின்னும் பல புதினங்களைப் புனைந்தாலும், இந்நூலே வரலாற்றுத்துறை அறிஞர், ஆராய்ச்சியாளர், மாணவர் போன்றவரிடையே என்னை ஓர் இலக்கிய ஆசிரியையாக அறிமுகம் செய்வித்திருக்கிறது. இப்பெருமைக்கும் முன்னோடியாக, இந்நூலை ஆர்வமும் ஆவலுமாக ஒரு திறனாய்வாளரின் கண்கொண்டு நோக்கி, ஆய்வுரை செய்த டாக்டர். திரு.ந. சஞ்சீவி அவர்களுக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.
இந்நூலை நான் எழுதுவதற்காக மேற்கொண்ட அல்லல்கள் பலப்பல. புத்தகத்தைக் கையில் காண்கையில் அவை அனைத்தும் மறந்து போகும் என்றாலும், இக்கதையில் ஒவ்வொரு செய்தியையும் அறிந்து, ஆய்ந்து, புனையும் கதைக்கேற்பப் பயன்படுத்திக் கொண்ட நுட்பங்களை வாசகர் உணர்ந்திருப்பாரோ என்று மனம் தவித்ததுண்டு.
நான் எழுதி முடித்து, நூல் வெளியாகி நாலைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், நான் கனவிலும் கருதியிராத வகையில் ஒரு பேராசிரியர் இந்நூலைப் படித்து வியந்த ஆய்வுரை படித்தார் என்ற செய்தியைக் கேட்டதும் பெரு மகிழ்ச்சி எய்தினேன். நான் எவ்வாறு மலை மக்கள் வாழ்வை நுணுக்கமாகச் சிந்தனை செய்து கருத்துக்களைப் புலப்படுத்தினேனோ, அவ்வகையில் ஒவ்வொரு கருத்தையும் பேராசிரியர் சஞ்சீவி அவர்கள் ஆராய்ந்திருக்கக் கண்டேன். ஓர் இலக்கியப் படைப்பாளிக்கு இதை விட என்ன பெரிய பரிசு தேவை?
இந்நூலை இப்போது ஆறாம் பதிப்பாக தாகம் பதிப்பகத்தார் கொண்டு வருகின்றனர். இத்தருணத்தில், இப்பதிப்புக்கு அன்புடன் அனுமதி அளித்த கலைமகள் அதிபருக்கும், இந்நூலுக்குச் சிறப்புகள் சேர்த்த பேராசிரியர் திரு.சஞ்சீவி அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் வாசகர்கள் வழக்கம் போல் இதையும் ஏற்று மகிழ்விப்பார்கள் என்று நம்புகிறேன். வணக்கம்.
ராஜம் கிருஷ்ணன்.