நம் தேசப்பிதா அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கையை மாற்றியது அரிச்சந்திரனின் கதை. இக்கதையைக் கேட்ட பிறகுதான் அவர் எந்த சூழ்நிலையிலும் சத்தியம் தவறாமல் வாழும் வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்.
சுமார் 35 வருடங்களுக்கு முன்னால் கோயில் திருவிழாக்களின்போது அரிச்சந்திரன் நாடகம் என்பது வழக்கமான ஒன்று. மக்கள் விடியவிடிய இந்தமாதிரியான நாடகங்களை பார்த்து இரசிப்பது வழக்கம். இப்பொழுது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே அதிகம் காண்கின்றனர். அரிச்சந்திரன் கதையை கேட்பதற்கான அல்லது படிப்பதற்கான வாய்ப்புக் குறைந்துவிட்டது.
சுயநலத்திற்காக பொய்யுரைப்பது என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது.மகனுக்காக, மனைவிக்காக, வேலைவாய்ப்புக்காக, தொழில் இலாபத்திற்காக என்று பொய்யுரைப்பது பலருக்கும் ஒரு காரணமாகிவிட்டது.
அரசியல்வாதிகள் தேர்தலுக்கு முன் வாக்குறுதிகளை தருகிறார்கள். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பலர் கொடுத்தவாக்குறுதிகளை மறந்து விடுகிறார்கள். பலர் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கான காரணத்தைச் சொல்லுகிறார்கள்.
தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் ஒப்பந்தம் செய்யப்பட நேரத்தைவிட அதிகநேரம் வேலைவாங்கப்படுகிறார்கள்.
ஏமாற்றப்பட்டவர்களோ மற்றவர்கள் மீது நம்பிக்கையிழக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு வேலை முடிக்கப்படுவதற்கும் காலவிரயமாகிறது. ஒரு நாட்டின் முன்னேற்றமும், மனித இனத்தின் முன்னேற்றமும் பாதிக்கப்படுகிறது.
நாம் இவ்வுலகில் அவதரிக்கும்போது எதுவும் கொண்டுவரவில்லை. இவ்வுலகைவிட்டுச் செல்லும்போது எதுவும் எடுத்து செல்லப்போவதில்லை. வாழும்போது எவ்வாறு வாழ்ந்தோம் என்பதே முக்கியமாகும். அதனால் வாழ்க்கையில் வாய்மையை கடைப்பிடிப்பதே சரியானதாகும்.
இக்கதையில் அரிச்சந்திரன் ஒருமுறை பொய்யுரைத்திருந்தால் கூட அனைத்து சுகங்களையும் அனுபவித்திருக்க முடியும்.ஆனால் அரிச்சந்திரன் மனைவியை இழந்தான், மகனை இழந்தான், இடுகாட்டில் வேலைசெய்யும் சூழ்நிலையும் உருவாகியது.இவ்வளவு சிரமங்களை அனுபவித்தாலும் அவன் வாய்மையைக் கடைப்பிடித்தான்.
அதனால்தான் அவனை தேவர்கள் போற்றினர். இன்றும் அவன் கதையை நாம் விரும்பி கேட்டும் படித்தும் வருகிறோம்.
இக்கதையை மின்புத்தகமாக Mukil E Publushing and Solutions Private Limited மூலம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.