தமிழகத்தின் பெருமையே சோழர்களும், பாண்டியர் களும், பல்லவர்களும் எழுப்பிய திருக் கோயில்கள்தாம். தேவாரம் திருவாசகம் பாடித் தமிழையும் சைவத்தையும் வளர்த்தார்கள். கோயில்கள் எழுப்பிச் சிற்பக்கலையை வளர்த்தார்கள். இந்தக் கோயிலுக்குப் பெருமை தேடத் தல புராணங்கள் எழுந்தன. மதுரையில் இன்று உள்ள மீனாட்சி கோயில் தொன்றுதொட்டு நிலைத்து இருப்பது. அதில் பொற்றாமரைக் குளமும் உள்ளது. இங்குக் குடி யிருக்கும் ஈசன் சோமசுந்தரர் எனப்படுவார்.
கோயில், தலம், தீர்த்தம் இம் மூன்றின் பெருமையையும் வரலாற்றையும் திருவிளையாடற் புராணம் கூறுகின்றது. மதுரைக்குக் கூடல், ஆலவாய் என்று மற்றும் இருபெயர்கள் உள்ளன. இறைவனின் முடியில் சூடிக் கொண்டிருக்கும் பிறைச்சந்திரனின்று எழுந்த மதுரத்துளிகளைத் தெளித்து அதனை இனிமையாக்கியதால் அது மதுரை எனப் படுகிறது. மேகங்கள் கூடி மழையைத் தடுத்தமையால் கூடல் என்று பெயர் பெற்றது. இறைவன் அனுப்பிய பாம்பு மதுரையைச் சுற்றி எல்லை காட்டியதால் ஆல வாய் என்று பெயர் வந்தது. இந்நகரம் மதுரைக் கண்டம், கூடற்கண்டம், ஆலவாய்க் கண்டம் என மூன்று பிரிவுகள் பெற்றுள்ளன. -
கம்பர். திருத்தக்கதேவர், சேக்கிழார் முதலிய மாபெரும் கவிஞர்கள் விருத்தப்பாக்களில் தெய்வத்திரு' கதைகளை எழுதிப் பரப்பினர். வில்லிபுத்துரார் பாரதம் எழுதினார். இவர்கள் வழியில் இத் தல புராணத்தைப்
பரஞ்சோதி முனிவர் தமிழில் கவிதை வடிவில் எழுதியுள் ளார். கவிதைகளில் புதையுண்டு கிடக்கும் செய்திகளை வெளிக் கொணரச் செய்த முயற்சியே இவ் உரை நடையாக்கம்.
பரஞ்சோதியார் எழுதிய நூலுக்கு மூலநூல் வட மொழியில் கிடைத்த புராணங்கள் என்று பரஞ்சோதி யார் கூறுகிறார். எது மூலநூல் என்பது தெளிவாகக் கூற முடியாது. எந்தத் தனிப்பட்ட புலவனும் இதை ஒருவரே எழுதியிருக்க முடியாது. இவை நாட்டுப்பாடல் போலக் கதைகள் அமைந்துள்ளன. மதுரையைச் சுற்றி இக் கதைகள் பின்னப்பட்டு உள்ளன. இவற்றை நாடோடிக் கதைகள் என்றும் கூறலாம்.
திருவிளையாடற் புராணம் திரைப்படத்தில் ஒரு சில கதைகள் வந்து மக்களைக் கவர்ந்துள்ளன. இதில் மொத்தம் உள்ளவை அறுபத்துநான்கு கதைகள் ; அவற்றை முழுவதும் இவ் உரை நடையில் தரப்பட் டுள்ளன.
இதில் உள்ள கதைகள் பல்வகையின; இந்திரன் வந்து இக்கோயிலைத் தோற்றுவித்தா.ை அவனைத் தொடர்ந்து அவன் ஏறியிருந்த ஐராவதம் என்ற வெள்ளை யானை மண்ணில் பிறந்து கோயிற் பணி செய்தது. பின் பாண்டியன் காட்டுவழியில் கிடந்த சிவலிங்கத்தைக் கண்டு கோயில் எழுப்பினான் என்று கதை தொடர்கிறது.
பாண்டிய அரசர்களுக்குப் பக்கத் துணையாக இருந்து அவர்களுக்கு நேர்ந்த இடுக்கண்களை எல்லாம் சோம சுந்தரர் தீர்த்து வைக்கிறார். தவறு செய்கின்றவர்கள் மண்ணில் பிறந்து மதுரையில் பொற்றாமரைக் குளத்தில் முழுகிக் கோயிலை வழிபட்டு விமோசனம் பெறுகின்றனர்.
உமையே தடாதகைப் பிராட்டியராக மலையத்துவச பாண்டியன் செய்த வேள்வியில் பிறந்து ஆட்சிக்குஉரிமை பெறுகிறாள். சோமசுந்தரரை மணந்து ஆட்சி அவரிடம் தரப்படுகிறது. இறைவனே ஆட்சி செய்த பெருமையைப் பாண்டி நாடு பெறுகிறது. பெண்ணரசி ஆட்சி செய்யும் பெருமையையும் பெறுகிறது. எவ்வகை யிலும் பெண் ஆனுக்கு இளைத் தவர் அல்ல என்பது உணர்த்தப்படுகிறது.
"பழி அஞ்சின படலம்' என்ற கதை அருமையான கதை. எப்பொழுதோ மரத்தில் தொத்திக் கொண்டிருந்த அம்பு தைத்துப் பார்ப்பினி ஒருத்தி இறந்து விடுகிறாள். அங்கு எதிர் பாராதபடி வந்த வேடுவன் தான் கொன்றுவிட்டான் என்று தண்டிக்க முற்படுகின்றனர். இறைவன் பாண்டி யனையும் பார்ப்பனனையும் ஊரில் செட்டித் தெருவில் நடக்கும் மனக்காட்சியைப் பார்க்க அனுப்புகிறார். கட்டி வைத்த பசு கட்ட விழ்த்தக் கொண்டு மணமகனை முட்டி அவனைப் பிணமகன் ஆக்குகிறது. இதற்கு எல்லாம் காரணம் கூறமுடியாது. சாவு எப்படி வரும் என்று கூற முடியாது. அதற்கு யாரையும் பழி கூறக் கூடாது என்ற கருத்தினை அறிவிக்கிறது.
இதைப் போலக் கருத்துள்ள கதைகள் பல உள்ளன. தமிழ் இசையின் பெருமையைக்காட்டப் பாணபத்திர னுக்கு உதவி செய்ய விறகு ஆளாக இறைவன் வருவதும் ஏமநாதனை வெல்வதும் அருமையான நிகழ்ச்சிகளாகும்.
இறைவன் விறகு வெட்டியாகவும், வளையல் விற்ப வனாகவும், மீன் பிடிப்பவனாகவும் பிறந்து அற்புதங்கள் செய்வது அருமையான நிகழ்ச்சிகளாகும்
நக்கீரருக்கும் சிவனுக்கும் நடக்கும் சொற்போர் நக்கீரனின் அஞ்சாமையைக் காட்டுகிறது. நெற்றிக்கண் திறந்து காட்டினாலும் குற்றம் குற்றமே என்று பேசிய புலவன் அவன். நக்கீரர் தமிழ்ப் புலவர்க்குப் பெருமை சேர்க்கிறார். -
கூந்தலுக்கு மணம் இயற்கையா செயற்கையா என்ற விவாதம் எழுகிறது. கவிதையில் தலைவன் தலைவியின் நலம் பாராட்டுதல் என்னும் அகப் பொருள்துறைப் பாடல் அது. குறுந்தொகையில் வரும் பாடல் அது. வண்டைப் பார்த்துத் தலைவியின் கூந்தலில் மணம் சிறந்தது என்று பாடும் பாடல் அது. பொருட்குற்றம் என்று நக்கீரன் சாட அது வழு அமைதி என்று விளக்கம் தரப்படுகிறது.
சங்கம் தோன்றிய கதையும், சங்கப் புலவர் வீற்றிருந்து ஆய்வதும் மிகச் சிறப்பாகக் கூறப் படுகின்றன. எனவே மதுரைக்குப் பெருமை தமிழ் வளர்த்ததால் ஏற்பட்டது என்று விவரித்துக் கூறப்படுகிறது.
இறுதியில் திருவாதவூரர் ஆகிய மாணிக்கவாசகர் செய்த கோயில் திருப்பணியும், அதனால் பாண்டியன் அவரைக் கடுமையாகத் தண் டித்ததும், இறைவன் வைகையில் வெள்ளம் ஏற்படுத்திச் சேதம் ஏற்படுத்து வதும், வந்திக்குக் கூலியாளாகச் சென்று பிரம்படி பட்டதும் சுவைமிக்க நிகழ்ச்சிகளாக அமைகின்றன.
ஞானசம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளிச் சமணரோடு வாதிட்டு அவர்களை வென்ற செய்திகளும் கூறப்படு கின்றன. எனவே பாண்டிய அரசர்களின் பணி, தமிழ் வளர்ச்சி, சைவம், மதுரைக் கோயில் வளர்ச்சி இவற்றை வைத்து இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. அவற்றிற்கு உரைநடை வடிவம் இதில் தரப்பட்டுள்ளது. கதைச் சிறப்பால் இந்நூல் வரவேற்புப் பெறும் என்ற நம்பிக்கை உளளது.
ரா. சீனிவாசன்