பணிவான வணக்கங்கள். பாண்டிய நாயகி! எனும் இந்தச் சரித்திரத் தொடர் எனது ஒரு எளிய முயற்சி. அமரர் கல்கியும், சாண்டில்யனும், கோவியும், விக்கிரமனும் வலம் வந்திருக்கும் உலகில் நானும் வலம்வர மேற்கொண்ட ஒரு சின்ன தவம். இது எத்தனை ஆழமானது-விசாலமானது நேர்த்திமிக்கது, காலத்தால் நிலைத்து நிற்கக்கூடியது என்பதெல்லாம் இனித் தெரியவரும். என் வரையில் காதலுக்கும் வீரத்துக்கும் சம அந்தஸ்து தந்து செயல்பட்டிருக்கிறேன். பொதுவில் சரித்திரம் என்றாலே அதில் கற்பனைச் சரக்குக்கு மிகுந்த இடம் தாராளமாக அளிக்கலாம். அதிலும் கல்வெட்டுக் குறிப்புகளாலும், சாசனங்களாலும் மட்டுமே அறியப்பெறும் விஷயங்களில் யூகமும் கற்பனையும் மட்டுமே பிரதான இடத்திலா இருக்கும். உண்மையும் ஆதாரமும் பூச்சரத்து நாராய் கண்ணுக்குத் தெரியாமல் தான் இருக்கும். ஓர் எழுத்தாளன் தன் திறனையும் கற்பனையையும் காட்ட சரித்திரக் கதை இடமளிக்கின்ற மாதிரி வேறு எதுவும் அளிப்பதில்லை. ஆராய்ச்சி மனதுக்கும் சரித்திரத்தில் தான் பிரதான பணி இருக்கிறது. இதனால் எல்லாம்தான் துணிந்து இந்த பாண்டிய நாயகியை நான் எழுதினேன். இந்தத் தொடரின் அடி ஆதாரம் மிக மெலிவானது; சொற்பமானது. பராந்தக பாண்டியன் ஒரு ராஜ ராஜ சோழன் அளவோ, சேரன் செங்குட்டுவன் அளவோ பிற்காலப் பாண்டியர்கள் போன்றோ பிரசித்தி மிக்கவனாய்ச் சரித்திரக் குறிப்புகளில் காணப்படவில்லை. ஆனால், சைவம் தழைத்த பாண்டிய மண்ணில் அவனொரு வைணவனாய் வாழ்ந்தான் என்பது ஆச்சரியம் தரும் ஒரு மின்வெட்டுச் செய்தியல்லவா? இதன் பின்னால் எழுப்ப வேண்டிய வினாக்களும் ஏகமல்லவா? அது மட்டுமா? அவன் தாய் குறுநிலத் தேசமான கெங்கநாட்டவள், தகப்பன் கோச்சடையனோ வீரபாண்டியன் இருவருக்கும் பிறந்த நெடுஞ்சடையனோ வைணவதாசன்! ஆச்சரியமாயிருக்கிறதல்லவா? மட்டுமா? சோழ மண்டலம் கடந்து நிற்கும் பல்லவனோடு தீராப்பகை... காலமெல்லாம் அவனுடன் யுத்தம். அவனை அடக்கி வெற்றி கண்ட தீரம்... என்று கண்ணில் பட்ட குறிப்புகள் வெறும் நிகழ்ச்சித் தொகுப்பாக எனக்குப் படவில்லை. ஊக்கத்திற்கும், ஆய்வுக்கும் இடமளிக்கும் விஷயமாகத்தான் எனக்குத் தோன்றின. ஆழ்வார்கள் தலையெடுக்க இந்தக் காலத்தில் மதுரைக்குள் கிரிதிருமால் நதி ஓடியதன் சான்றாக இன்றும் அந்த நதிப்பாதை இருப்பதைப் பார்த்தபோது கற்பனைக் சிறகின் அசைப்பை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. கூடல் அழகனின் திருவருளும் கூடியதால் இந்தப் பாண்டிய நாயகி ஜனித்தாள் என்று கருதுகிறேன். இந்தத் தொடரில் பராந்தகனின் காதல் உள்ளத்தை நான் விரித்துப் பார்த்த அளவு அவனது மற்ற பக்கங்களை நான் பார்த்திடவில்லை. பராந்தகனின் அண்டை அயல் உறவு. ராஜ்ஜியம் புரிந்த விதம் இவன் காலத்தில் தமிழுக்குக் கிட்டிய மரியாதை ஆன்மிகம் தழைத்த பாங்கு என்றெல்லாம் விரித்துப் பார்த்தால் எங்கே வெறும் விளக்கச் சித்திரமாகி வேகமும் விறுவிறுப்பும் மட்டுப்படுமோ என்கிற பயம் கூட நான் மற்ற விஷயங்களை ஆழமாகக் காணத் தடை செய்தன. எனவே இதனுள் அது இல்லாதது குறித்து ஆழ்ந்து நோக்குபவர்கள் வருத்தம் தவிர்க்க வேண்டுகிறேன் கன்னி முயற்சியாதலால் ஊக்கமிகு விமரிசனங்களை எதிர் நோக்குகிறேன். ஊனங்கள் இருப்பின் சுட்டுங்கள் அது இனிவரும் தொடர்களில் நீங்கும். வாசக நெஞ்சங்களிலும் இதற்கோர் இடம் கிட்டியதை அவ்வப்போது எனை நெருங்கிய விமரிசனங்களால் உணர்ந்தேன். பணிவன்புடன் இந்திரா சௌந்தர்ராஜன்.