'ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன' மேகாலய மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கைப் பின்னணியாகக் கொண்டது. ஷில்லாங் வெகு அழகான மலைவாசஸ்தலம். நான் அதன் இயற்கை அழகை என்னை மறந்து ரசித்து அமர்ந்த நாட்கள் அநேகம். அங்கு ப்ளம்மரங்கள் பூக்கும்போது பார்க்கக் கிடைக்கும் காட்சி தெய்வ தரிசனம் போன்றது. அங்கு எங்களுக்குப் பரிச்சயமான ஒரு அஸ்ஸாமிய குடும்பத்தில் நான் மனோவியல் ரீதியாக அவர்களது பிரச்சினையை அணுக முயன்றதன் வெளிப்பாடே இந்த நெடுங்கதை. இது எங்கு வேண்டுமானாலும் நிகழக்கூடிய கதைதான். ஆனால் நான் ஷில்லாங்கில் இருந்தபோது சந்தித்த கதாபாத்திரங்கள் என்பதால் அதன் இயற்கைப் பின்னணியில் எழுதினேன். நான் எந்த மாநிலப் பின்னணியில் கதைகள் எழுதினாலும், தமிழ் வாசகர்கள் கதை மாந்தருடன் நெருக்கம் காண தமிழ் பேசும் பாத்திரங்களை உருவாக்க வேண்டியது அவசியம் என்று தோன்றியதால் அநேகமாக அத்தகைய பாத்திரங்கள் அக்கதைகளில் இடம் பெறுவது வழக்கமாகிப் போயிற்று. இக்கதையிலும் அப்பாவாக வரும் பாத்திரம் ஒரு தமிழர்.