எழுத ஆரம்பித்த நாட்களில் 'குமுதம்' இணை ஆசிரியர் ரா.கி. ரங்கராஜனின் படைப்புகளை ஒன்று விடாமல் படித்து ரசித்தவர்களில் நானும் ஒருவன். பத்திரிகையைக் கீழே வைக்க முடியாமல், முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை வாசகரைக் கூடவே அழைத்துக்கொண்டு போகும் திறமை அவருக்கு இருந்ததுதான் அதற்குக் காரணம். வாரப் பத்திரிகையின் பொறுப்பு மிக்க ஆசிரியர் பதவியையும் கவனித்துக் கொண்டு, சிறுகதை அல்லது சினிமா செய்தி அல்லது தொடர்கதை எழுதுவது என்பது எத்தனை பெரிய பாரம் என்பதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் பிரமிப்பாக இருக்கிறது. ஆனால் அவருக்கு அதுதான் மூச்சாக இருந்தது.
டி. துரைசாமி என்ற புனைபெயரில் 'ஒளிவதற்கு இடமில்லை' என்ற மர்ம நாவல். 'கோஸ்ட்', 'புரொபசர் மித்ரா', 'மறுபடியும் தேவகி' போன்ற அமானுஷ்யமான பின்னணிகளை வைத்து எழுதுகையில் 'கிருஷ்ணகுமார்' என்ற புனைபெயர். சமீபத்திய பிரிட்டிஷ் சரித்திரத்தைப் பின்னணியாகக் கொண்டு அவர் எழுதிய நாவல் 'அடிமையின் காதல்', நாவலின் கதாநாயகன் பெயரைக் கடைசிவரை காஞ்சிபுரத்தான் என்றே குறிப்பிட்டிருப்பார்! 'வாளின் முத்தம்' முகலாய அரசர் அக்பர் காலத்தைப் பின்னணியாகக் கொண்டது. அதற்கு ஒரு முறை ராஜஸ்தான் சென்று, ஆஜ்மீர்கூடப் போய்விட்டு வந்தார் ரங்கராஜன், அவருடைய இன்னோர் அற்புதமான படைப்பு 'நான் கிருஷ்ணதேவ ராயன்', சரித்திரக் கதையை எத்தனை சுவாரசியமாக எழுத முடியும் என்பதற்கு உதாரணம் இந்த நாவல். இதற்காக இரண்டு வருடங்கள் அலைந்து, ஆராய்ச்சிகள் மேற்கொண்டார் என்பது வெகு சிலருக்கே தெரியும். ஆனந்த விகடனில் வெளியான இந்தச் சரித்திரத் தொடர், அமோக வரவேற்பைப் பெற்றது.
ஆனால் அவருடைய முதல் நாவலான 'படகு வீடு' அவருடைய மாஸ்டர் பீஸ் என்பேன். 'ஹேமா, ஹேமா, ஹேமா', 'மூவிரண்டு ஏழு' ‘23ஆவது படி,' 'ஹவுஸ்புல், 'ராசி' எல்லாமே ஒரு குறிப்பிட்ட கதைகளை வைத்துப் புனையப்பட்டவை.
'ராசி' நாவலுக்குப் பின்னர் அவருடைய கவனம், மொழி பெயர்ப்புகளில் சென்றது. அண்ணா அவர்கள் கடைசியாகப் படித்த மேரி கொரேலியின் 'புரட்சித் துறவி'யை அவர் மொழி பெயர்த்தபோது கிடைத்த அனுபவமும், பாராட்டும் அவரை 'பட்டாம்பூச்சி' நாவலை உருவாக்க உதவியிருக்கலாம். தமிழில் எழுதப்பட்டது போல் அந்த மொழிபெயர்ப்பு அமைந்திருந்தது.
தான் எழுதினால் மட்டும் போதாது, எழுதும் திறமை தங்களுக்குள் ஒளிந்து கொண்டிருப்பதாக நினைக்கும் எவரும் சிறுகதை எழுதலாம் என்பதற்கு அவர் நடத்திய 'எப்படி கதை எழுதுவது?' என்ற பயிற்சிப் பட்டறையும், பின்னர் அந்தப் பயிற்சிக் கட்டுரைகளின் தொகுப்பும் தமிழில் வேறு யாரும் செய்து பார்க்காத முயற்சி. இதில் முதல் முதலாக மாணவராகச் சேர்ந்தவர் - 'குமுதம்' ஆசிரியர் எஸ்.ஏ.பி. இதைவிடப் பெரிய பெருமை ரா.கி. ரங்கராஜனுக்குக் கிடைத்திருக்காது. 'எப்படி இதைத் துணிந்து ஆரம்பித்தீர்கள்?' என்று ஒரு முறை ஒரு பேட்டியின்போது அவரிடம் கேட்டேன். 'தமிழனால் எதுவும் முடியும்' என்று பாரதி சொல்லியிருக்கிறார். அதனாலேயே அதை சாதிக்க முடிந்தது என்றார். என்ன நம்பிக்கை, பாருங்கள்! 'உருப்படியான பணி' என்று அசோகமித்திரன்கூட இந்தப் பயிற்சியையும் நூலையும் பாராட்டியிருக்கிறார்.
ஓய்வு பெற்ற பின்னும் அவர் சும்மா இருக்கவில்லை. 'நாலு மூலை' என்ற தலைப்பில், அவர் அண்ணா நகர் டைம்ஸில் எழுதி வந்த கட்டுரைகளில் விஷயமும் இருக்கும், நகைச்சுவையும் இருக்கும், தகவலும் இருக்கும். ஒரு சாதாரண விஷயத்தைக்கூட அசாதாரணமானதாக எழுதிவிடும் ஆற்றல் அவரிடம் அபரிமிதமாக இருந்தது என்பதுதான் உண்மை. சினிமா நிருபர்கள் நட்சத்திரங்களைச் சந்தித்துவிட்டு வந்து தரும் தகவல்களை வைத்து 'லைட்ஸ் ஆன்' எழுதினார். 'ஸ்டார் டஸ்ட்' இதழில் ஷோபா டே ஆங்கில வார்த்தைகளுக்கு நடுவே பொருத்தமான ஹிந்தி வாக்கியங்களைச் சொருகிவிடுவார். அது போலவே, 'லைட்ஸ் ஆன்'ல் மிகப் பொருத்தமான ஆங்கில வார்த்தைகளை அல்லது சொற்றொடர்களை நுழைத்துவிடுவார் ரா.கி.ர. புதுமை மட்டுமல்ல, போக்கு எப்படி இருக்கிறது என்பதன் முழு அர்த்தமும் புரிந்து கொண்டவர்.
ரா.கி.ரங்கராஜன் அவர்களைச் சந்திக்கப் போவதென்றால் ஒரு தனி உற்சாகம் பிறக்கும். தாம் படித்த ஆங்கில நாவலாசிரியர்களின் நூல்களைக் குறிப்பிட்டு, நம்மையும் படிக்கச் சொல்வார். அவர் படைப்புகளின் மூலமாக, இப்போதும்கூட அவரைச் சந்திக்க முடிகிறது. நம்மிடம் உரையாடுவது போல் அவை இருக்கின்றன. எதை எழுதினாலும் வாசகரை மனத்தில் சிம்மாசனம் போட்டு அமர்த்திக் கொண்டு எழுதியவரின் வரிகள் வேறு எப்படி இருக்கும்?
- சாருகேசி
ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.
- கல்கி
'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.
- சுஜாதா