இந்தியர்களுக்குச் சரித்திர உணர்வு உண்டு என்பது மெய்க் கீர்த்திகளாலும், கல்வெட்டுக்களாலும் தெரிய வருகின்றது. இராம காவியத்தைச் செய்த வால்மீகி - அதை ‘சீதாயாஸ் சரிதம் இதம்’ என்றார். கண்ணகியின் வரலாற்றைச் சொல்லும் வகையில் சிலப்பதிகாரம் சேர, சோழ, பாண்டியர்களின் மாண்பினைச் சொன்னது. பதிற்றுப் பத்து சேர மன்னர்களின் வரலாற்றையும், நாயன்மார்களின் வரலாற்றைப் பெரிய புராணமும், திரு அரங்கத்தின் வரலாற்றை திவ்யசூரி சரிதமும் தெளிவாக்க வில்லையா?
அண்மை காலத்தில் வரலாற்று நூல்களுக்கு வித்திட்டவர் அமரர் கல்கி தான். ஆங்கில இலக்கியத்தில் சர் வால்டர் ஸ்காட், கிப்பன் போன்றவர்களின் பாணியில் காவியங்களைப் படைத்தார். வரலாற்று நவீனங்கள் அரசர்களைப் பற்றியே இருந்தாலும் அவரின் பரஞ்சோதி, படகோட்டி பொன்னன், வந்தியத் தேவன் ஆகியோர் சாமானியர்கள் தான். உழைப்பால் உயர்ந்தவர்கள்.
அவ்வகையில் கடல் கடந்த வெற்றிக் குவியலைக் காட்டிலும் “தி கிரேட் ஆல்மடா” என்ற மேலை நாட்டுக் கடல் போருக்கு சமமான காந்தளூர்ச் சாலை கல மறுத்தருளியதைக் காட்டிலும், ஏன், வான் மூட்டும் ராசராசேச்சரத்தைக் காட்டிலும் கூட, சிறப்பான செயலைச் செய்து தமிழர் நெஞ்சமெல்லாம் இனிக்கச் செய்தவர், திருமறைகண்ட செல்வர் ராசராசன்.
அந்தத் திருமறைகண்ட செல்வர் தேவாரப் பதிகங்களுக்குப் பண் அமைக்க முடியாமல் தவித்தபோது, இறைவன் ஆணையின்படி அதனைச் செய்து முடித்தவள் தான் இந்த “ராஜ நாயகி.” தாழ்த்தப்பட்ட வகுப்பிலிருந்து வந்த இவளால் தான் தேவாரத்துக்குப் பண அமைக்க முடிந்தது. போற்றுதற்குரிய இப்பேற்றினை இன்றும் நாம் உணர்ந்து மிகவும் கடமைப் பட்டுள்ளோம்.
அன்புடன், ராஜரத்னம்.
எம்.ஏ. (எகனாமிக்ஸ்), எம்.ஏ. (பாலிடிக்ஸ்), எம்.ஏ. (ஹிஸ்டரி), பி.எல். பட்டங்கள் பெற்று வேலைவாய்ப்புத்துறையில் இணை இயக்குனராய் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
இலக்கியத்தின் மீது அதீத ஆர்வம் கல்லூரி நாட்கள் முதல் உண்டு. அலுவல் பணி காரணமாய் எழுத முடியாமல் போனாலும், மனைவி லட்சுமி ராஜரத்னத்தை எழுத ஊக்கப்படுத்தினார்.
மகள் ‘ராஜஸ்யாமளா’ பெயரில் 1970களில் இவர் எழுதிய சிறுகதைகள் இருமுறை கல்கி சிறுகதைப் போட்டியில் பரிசினை வென்றுள்ளன. இரண்டு சரித்திர நாவல்கள் எழுதியுள்ளார்.
பணி ஓய்வு பெற்ற பின், சொந்த பெயரில் நிறைய ஆன்மீக கட்டுரைகள் எழுதினார்.
மனைவி மற்றும் மகள் எழுத்துப் பணிக்கு பக்க பலமாய் இருந்தார். 2011ல் இறைவனடி சேர்ந்தார்.