கலீலியோ பிறந்து துல்லியமாக 300 ஆண்டுகள் கழித்து 1942ம் ஆண்டு ஜனவரி 8ம் நாளன்று இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டு நகரில் ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்தார். 1963ல் அவருக்கு இயக்க நரம்பணு நோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு அப்போதுதான் 21 வயது நிறைவடைந்திருந்தது. அவர் ஒரு சக்கரநாற்காலியில் முடங்கிக் கிடக்கும்படி ஆனபோதும்கூட, அவர் தன்னுடைய குடும்ப வாழ்க்கையையும் தன்னுடைய இயற்பியல் ஆராய்ச்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டார். கோட்பாட்டு இயற்பியலாளரான அவர், உலகம் நெடுகிலும் பயணித்துப் பொதுச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். ஐன்ஸ்டைனுக்குப் பிறகு இவ்வுலகம் கண்ட மிகச் சிறந்த கோட்பாட்டு இயற்பிலாளராகக் கருதப்படுகின்ற ஸ்டீபன் ஹாக்கிங், 2018ம் ஆண்டு மார்ச் 14ம் நாளன்று தன்னுடைய 76வது வயதில் இயற்கை எய்தினார். அவருக்கு மூன்று குழந்தைகளும் மூன்று பேரக்குழந்தைகளும் உள்ளனர்.