இந்து சமுதாயத்தின் இதயத்தில் காவியச் சுவையோடும் பக்தி ரசத்தோடும் மிளிரும் ஒரு இதிகாசத்தின் துண்டுப் பகுதி இது. உலகில் எவ்வளவோ அமர காவியங்கள் உருவாகியுள்ளன. ஆனால், நம்முடைய பாரத இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் போல மானுட வாழ்வின் ஒட்டுமொத்த செறிவுகளைப் பிரதிபலிக்கும் ஒரு இயக்கம் வேறு எங்கும் இல்லை. 'மண்ணாசையால் விளைந்தது மகாபாரதம், பெண்ணாசையால் விளைந்தது ராமாயணம்!' என்று இந்த இதிகாசங்களின் கருப்பொருளை இரண்டு வரிகளில் கூறுவார்கள். ஒரு வகையில் மண் வேறு பெண் வேறு அல்ல. இரண்டுக்கும் ஏராளமான ஒற்றுமைகள் உண்டு. இரண்டுமே உயிர்களைத் தன்னுள்ளிருந்து எடுத்துத் தருபவை. இரண்டுமே பொறுமையாக இருந்து தாங்கிக் கொள்ளும் திறன் படைத்தவை. இரண்டின் அம்சமும் பொதுவான சக்தியும் ஒன்றேதான். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்து முடிந்த சம்பவங்கள் இன்றும்... என்றும் பொருந்தும் விதமாக அதன் உணர்ச்சிக் களன் அமைந்திருப்பது, இன்றைய ஹைடெக் விஞ்ஞானத்தின் உன்னதமான ஒரு கண்டுபிடிப்புக்கூட தரமுடியாத ஆச்சரியமாகும். இதில் சுந்தர காண்டம், படிக்கப்படுவதோடு பாராயணம் போல துதிக்கவும்படுவதுதான் இதன் சிறப்பு அம்சம். வாசக உலகமும் ஆன்மிக உள்ளங்களும் இருகரம் நீட்டி வரவேற்றன. அனைத்துக்கும் மேலாக என் நற்கருமம் ஒன்றுதான் இந்த நல்ல முயற்சியை நான் செய்ய துணை நின்றது. அனுமனும் ஆட்கொண்டான்! அழகுத் தமிழில் என் பேனா வழியாக பெருகி வழிந்தான்.இதனால் நான் கணியனானேன். இது போதும் எனக்கு? இதோ... இதை எழுதும் இப்பொழுதும் அருகிருந்து, புன்னகையோடு பார்த்து, என் சிரம் கோதி, உச்சிமோந்து ஆசீர்வதிக்கிறான் அனுமன். அனும... நின் ஆசியை எனக்கு மட்டுமில்லை ஐயனே... இதை வாசிக்கும் அத்தனை பேருக்கும் வாரி வழங்கு. பணிவன்புடன், இந்திரா சௌந்தர்ராஜன்