பெண்ணின் பெருமை உலக வரலாற்றிலே, நாட்டின் விடுதலைக்காகப் போரிட்டுத் தியாகம் புரிந்த பல மங்கையர் திலகங்கள் இன்றும் உயர்வாகப் பேசப்படுகிறார்கள். ஜான்சி ராணியும், கேப்டன் லட்சுமியும், வீரமங்கை வேலு நாச்சியாரும், ராணி சென்னம்மாவும் அந்நிய ஏகாதிபத்யத்தை எதிர்த்து வரலாற்றில் அழியா இடம் பெற்றிருக்கிறார்கள். நான் எழுதும் வரலாற்றுப் புதினங்களில் பெண் குலத்திற்குப் பெரும் பங்கை அளித்திருக்கிறேன். சோழர் - சேரர் - பாண்டியர் - நாயக்கர் - பல்லவர்கள், எந்தக் காலத்து வரலாறாயிருந்தாலும் நான் ஒரு பெண் பாத்திரத்தைப் படைத்து நாட்டு விடுதலைக்கு மிக உயரிய பங்கை அவர்கள் நிறைவேற்றியிருப்பதாகப் புனைந்து எழுதத் தவறமாட்டேன். அதனால்தானோ என்னவோ, “விக்கிரமன் வரலாற்றுப் புதினங்களில் பெண்கள் பங்கு” என்ற தலைப்பின் கீழ் ஆராய்ச்சி செய்து காரைக்குடியைச் சேர்ந்த திருமதி கண்ணாத்தாள் எம்.ஏ. முனைவர் பட்டம் பெற்றுப் பலராலும் புகழப்பட்டுள்ளார்கள். ‘தெற்கு வாசல் மோகினி’ - புதினக் கதை நடந்த காலம், சோழர்ப் பேரரசுக்கு மிகுந்த சோதனையான காலம். பாண்டியர்களின் கருணையில் வாழவேண்டிய சூழ்நிலை... உடனிருந்தே சதி செய்பவர்களும், காட்டிக் கொடுப்பவர்களுமாக கதையில் பல மாந்தர்களுடன், உண்மைத் தொண்டர்களும், ஊழியர்களுமிருந்தார்கள். இந்தப் புதினத்தின் கதைத் தலைவி, குஞ்சரி சோழ நாட்டைக் காப்பாற்ற அரும்பாடுபட்ட நிகழ்ச்சிகளை நான் எழுதும்போது எனக்குப் பல இடங்களில் சிலிர்ப்பே ஏற்பட்டது. வருங்காலத்திற்கு நல்ல வழிகாட்டக் கூடிய தாய்க்குலம் பெருமையைப் பல புதினங்களில் எழுதும் எண்ணத்தை எனக்கு இறைவனும், தமிழ்ப் பெருமக்களும் அளித்ததற்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தெற்கு வாசலில் என்றுமே அழியாமலிருக்கும் இறைவனுக்கு என்றுமே பணி செய்ய உறுதி பூண்ட குஞ்சரியை மக்கள் மறக்க மாட்டார்கள் - என் கற்பனையென்றாலும் ஏன் நடந்திருக்கக் கூடாது. கலைமாமணி விக்கிரமன்