ஒவ்வொரு தேசத்தின் சரித்திர பக்கங்களிலும் கண்ணுக்கு தெரியாத கண்ணீர் கறைகளும் உறைந்து போன உதிரச் சுவடுகளும் இருக்கத்தான் செய்கின்றன...
ஒரு நந்தவனம் இலையுதிர்ந்த கதையை இரவுகளோடு சொல்ல அதைக் கேட்டு இரவானது பனித்துளி கண்ணீர் வடிப்பது போல சரித்திரத்தின் மறைந்த சம்பவங்களை கவிதை நடையில் தொகுக்கும் எழுத்து பயணமே உடைந்த நிலாக்கள் என்னும் உணர்ச்சிவசமான காதல் களஞ்சியத்திற்குள் படிந்து கிடக்கும் உண்மை!
உடைந்த நிலாக்கள் என்பது காதலித்தவர்களுக்காக காதலிப்பவர்களுக்காக காதலிக்கப் போகிறவர்களுக்காக காதலை உணர்ந்தவர்களுக்காக காதலை மதிப்பவர்களுக்காக காதலை அறிந்தவர்களுக்காக உருவாக்கப்பட்டது!
உடைந்த நிலாக்கள் இப்போது முதல் பாகம், இரண்டாம் பாகம் கடந்து மூன்றாம் பாகத்தினுள் நுழைகிறது!
உடைந்த நிலாக்கள் மூன்றாம் பாகத்தின் களம் விசாலமானது! சற்றே வியப்பானது!
கிளியோபாட்ரா என்னும் உலகப் பேரழகியின் வெளிச்சத்திற்கு வராத அந்தரங்க வாழ்க்கையின் அபூர்வமான தகவல்களும் - சம்பவங்களும் காட்சிகளும் கற்பனை கலந்த நெசவில் இலேசான அந்தி மழை போன்ற கவிதை நடையில் "ரோமாபுரியில் காதல் தேவதை” என்ற தலைப்பில் தேவி வார இதழில் தொடராக வெளிவந்தது!
உலகில் அதிகமாக சொல்லப்பட்ட பத்து பெயர்களில் கிளியோபாட்ரா இருக்கும்! உலகில் அதிகமா ஐந்து பெயர்களிலும் கிளியோபாட்ரா இருக்கும்! உலகில் அதிகமாக சொல்லப்பட்ட இரண்டு பெயர்களிலும் கிளியோபாட்ரா இருக்கும்!
அந்த எகிப்து தேசத்து இளம் நைல் நதி நடந்து சென்ற பாதைகளையும் அது ரோமாபுரி வரை கலங்கடித்த ராஜ்ஜிய ரசனாலயங்களையும் சில ஜீரணிக்க முடியாத வரலாற்று நிகழ்வுகளையும் இருட்டடிப்பு செய்யாமல் அப்படி அப்படியே எழுத்துக்களாய் மெழுகி, கிளியோபாட்ரா என்னும் அழகு சூறாவளி சுற்றியடித்த திக்குத் திசைகளை ஒரு கவிதை ஒளிப்பதிவு செய்யும் நோக்கத்துடன் ஆரம்பிக்கிறேன்!
உலகத்தின் வெப்பமான பகுதிகளில் குறிப்பிடத்தக்க ஒரு வெப்பக் குவியல் எகிப்தில்தான் உள்ளது!
எகிப்து தேசம் என்பது எப்போதுமே வரலாற்றின் ஒரு மர்மத்துவமான மண்ணாகவே இருந்து வருகிறது!
அந்த பாலைவன பூமியின் கொடூரமான வெப்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தது நைல்நதி!
உலகின் நீளமான நதியையும் ஆழமான சரித்திரத்தையும் கொண்டது எகிப்து கலாச்சாரம்!
மன்னர்கள் தங்கள் உடல்களை பாதுகாத்துக் கொள்வதற்காக விண்ணை உரச கட்டிய பிரமிடுகள் நாளைய உலகத்தையும் பிரமிக்க வைக்கும்! இந்த பிரமிடுகளின் பூமியில்தான் பல காதல் ரகசியங்களும் பல மனித நாகரீகங்களும் புதைந்துள்ளன...
ஒவ்வொரு பிரமிடும் இன்றைய மதிப்பின் படி ஒரு தேசத்தை வாங்கும் அளவில் உள்ளது!
அந்த அந்தரங்கமான அடியிருட்டுக்குள் படிந்து கிடந்த ஒரு அசுரத்தனமான தேவதையின் உயிர்த்துடிப்புள்ள உண்மைகள்தான் இந்தப் புத்தகம்!
அன்புடன்
பா. விஜய்
பா.விஜய், தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை தனது ஒவ்வொரு பூக்களுமே (திரைப்படம்:ஆட்டோகிராப்) என்ற பாடலுக்காக பெற்றுள்ளார்.
கவிஞர் பா.விஜய் 1974 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் கோயமுத்தூரில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் வி. பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் பெயர் சரஸ்வதி (கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியை). இவரின் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள உட்கோட்டை ஆகும்.
இவர் 1978 முதல் 1980 வரை பாலர் பள்ளியிலும் 1980 முதல் 1985 வரை எம்.சி.ஆர்.ஆர். நாயுடு பள்ளியிலும், 1986 முதல் 1990 வரை சபர்பன் மேல்நிலைப்பள்ளியிலும் 1990 முதல் 1992 இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். 1994 முதல் 1996 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார். 2003 முதல் 2005 வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
இயக்குனர் கே. பாக்யராஜின் ஞானப்பழம் படத்தில் முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை சுமார் 600 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இதுவரை 3000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றுள்ளார். முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கி பாராட்டியுள்ளார். கவிஞர் வாலி தமது கலையுலக வாரிசாக பா.விஜயை அறிவித்து பெருமையளித்துள்ளார். பாடலாசிரியராகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த இவர் இரு தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
பா. விஜய் இதுவரைக்கும் இலக்கியப் படைப்புகளாக கவிதை, நாவல், சரித்திர புதினங்கள், கட்டுரை படைப்புகள் என 47 படைப்புகளை எழுதியுள்ளார் உள்ளார் இவருடைய நூல்களில் இருந்து சுமார் 350 மாணவர்கள் எம்பில் ஆய்வும் 60க்கும் மேற்பட்டோர் பிஹெச்டி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது