புருஷோத்தமனும் அசோகனும் சமுத்திரகுப்தனும் ஹர்ஷரும் சிவாஜியும் மாவீரர்கள் என நாம் படித்திருக்கிறோம். ஆனால், தமிழகத்தில் பிறந்துத் தமிழகத்தைக் காப்பாற்றப் போரிட்ட வீரர்கள் பலரைப் பற்றி இன்னும் நூல் வடிவில் வராததால் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாது போய்விட்டது.
மாமல்லரும், பரஞ்சோதியும், உதய சந்திரனும், கருணாகரத் தொண்டைமானும், வந்தியத் தேவனும், ராஜராஜனும் வரலாற்றுப் புகழ் பெற்றவர்கள். அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் ஒரு பெருஞ் சரித்திர நவீனம் எழுதலாம். வாழ்வின் விளக்கமே காதலும் வீரமும் தானே! வீரர் வாழ்வில் இரண்டிற்கும் இடமில்லாதிருக்குமா! இரண்டும் சேர்ந்து விட்டால் கதைச்சுவைக்கு கேட்க வேண்டுமா?
நவீனம் ஒன்று எழுத வரலாற்றுப் பின்னணியை நான் தேடி ஆராய்ந்தபோது 'உதயசந்திரன்' என் கண்முன்னர் கம்பீரமாக வந்து நின்றான். அவனது வீர தீர சாகசங்களைக் கொண்டு கதை புனையத் தொடங்கினேன்.
சரித்திரக் கதை எழுதுவதிலுள்ள கஷ்டங்களைப் பற்றி நானே பெருமை கொள்ளக்கூடாது. அத்துறையில் புகுபவர் அறிவர். வரலாற்று உண்மைகளுக்கு மாறுபடாமல், அக்காலச் சூழ்நிலையினின்று வழுவாமல், சொந்தக் கற்பனைகளை அவற்றுடன் ஒட்டவைக்கும்போது மிக்க கவனத்துடன் இருக்க வேண்டும்.
நாவல் படிக்கச் சுவையாயிருந்தாலும் இல்லாவிடினும் அந்நாவலின் மூலம் தவறான சான்றுகள் மக்கள் மனத்தில் படுமாறு செய்துவிடக் கூடாது. இவற்றை மனத்தில் கொண்டு நான் எழுதிய முதல் நாவல் ‘உதயசந்திரன்'
- விக்கிரமன்