ராஜேஷை வைத்து நான் 'அச்சமில்லை அச்சமில்லை' திரைப்படத்தை எடுத்த காலகட்டத்திலேயே அவருடைய உலக சினிமா பற்றிய அறிவு என்னைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது.
கமல்ஹாசனையும் ராஜேஷையும் இணைக்கும் ஒரு சின்னத் தகவல் ஒன்று உண்டு.
'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படம் நான் எடுக்க நினைத்தபோது அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் முற்றிலும் புதியவர்களையே போடுவது என்று தீர்மானித்திருந்தேன். எல்லாப் புதுமுக நடிக நடிகையர்களும் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். விகடகவி பாத்திரத்திற்கு சின்னஞ்சிறு இளைஞனான ராஜேஷைத்தான் நான் தேர்வு செய்து வைத்திருந்தேன்.
படப்பிடிப்பிற்குச் செல்வதற்கு முன் ஒரு சின்ன யோசனை! மிகவும் நுணுக்கமான, அதே நேரத்தில் மிகக் கடினமானதுமான அந்த விகடகவி பாத்திரத்தில் முற்றிலும் புதியவரான ராஜேஷினால் ஈடு கொடுக்க முடியுமா என்கிற ஒரு சந்தேகம் எனக்கும் தயாரிப்பாளர் அரங்கண்ணல் அவர்களுக்கும் ஏற்பட்டது.
இதைப்பற்றிப் பேசிக்கொண்டே காரில் ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்க அய்யங்கார் தெருவில் வந்து கொண்டிருந்தோம். இடது பிளாட்பாரத்தில் கமல்ஹாசன் தற்செயலாக நடந்து வந்து கொண்டிருந்தார். 'அரங்கேற்றம்' திரைப்படம் வெளியாகி விட்ட காலகட்டம் அது.
கமலைப் பார்த்தவுடன் காரை நிறுத்தச் சொல்லி கமலைப் பார்த்து, "எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்?'' என்று நான் கேட்க, "வீட்டுக்குத்தான்" என்று கமல் சொல்ல, அவரைக் காரில் ஏற்றிக்கொண்டு நேராக அரங்கண்ணல் அலுவலகத்திற்கு வந்தடைந்தோம்.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் விகடகவி வேடத்திற்குப் பொருத்தமானவர் கமல்தான் என்று முடிவு எடுக்கப்பட்டது.
"இந்தக் கதாபாத்திரத்தை தெருவில் போகிறவன்கூட நன்றாகச் செய்துவிட முடியும் என்று நினைத்துத்தான் என்னைத் தெருவில் இருந்து பிடித்துக் கொண்டு வந்தீர்களா" என்று கமல் அப்பொழுதே தமாஷாகச் சொன்னதும் எனக்கு நினைவுக்கு வருகிறது.
ராஜேஷ் அவர்களைப் பிறகு வரவழைத்து இந்த மாற்றத்தைச் சொன்னவுடன் பெரிய அதிர்ச்சிக்கு அவர் உள்ளானார். எப்படியும் இந்த இழப்பைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் உங்களுக்கு ஈடுகட்டுகிறேன் என்று ராஜேஷுக்கு உறுதியளித்து அனுப்பி வைத்தேன்.
இந்த உறுதி 'அச்சமில்லை அச்சமில்லை' திரைப்படத்தில் ஈடு செய்யப்பட்டது.
இன்றைக்கு ராஜேஷ் அவர்கள் தமிழ்த் திரையுலகில் ஒரு சிறந்த நடிகராகவும் ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபராகவும் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
ராஜேஷ் அவர்களுடைய திரைக்கலைஞர்கள் பற்றிய தகவல்களும், திரை நுணுக்கங்கள் பற்றிய அறிவும் வருங்கால இளைஞர்களுக்கும், முக்கியமாக சினிமா மாணவர்களுக்கும் பெரும்பயன் தரும் விதமாகவும், அவர்களுக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாகவும் இருக்கும் விதத்தில் இந்த நூலை ராஜேஷ் அவர்கள் திறம்பட எழுதியிருக்கிறார்.
மிகப் பிரபலமான உலக நட்சத்திரங்களில் ஐவரின் வாழ்க்கை வரலாற்றை இந்த நூலில் கையாண்டிருக்கிறார். சுவையுடன் எழுதப்பட்ட இந்த நூலில் இதுவரை நாம் கேட்டறியாத தகவல்கள் ஏராளம்.
சினிமா மாணவர்கள் மட்டுமல்லாமல் மற்ற ஏனைய மாணவர்களும், வாழ்க்கையில் போராடி மாபெரும் வெற்றி பெற்ற இந்தக் கலைஞர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து அதன் மூலம் நல்ல பயன் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
ராஜேஷ் அவர்களைப் பாராட்டி மகிழ்கிறேன். இந்த நூல் மிகப்பெரிய வெற்றியைப் பெற நெஞ்சார வாழ்த்துகிறேன்.
- பிரியமுடன்
-கே. பாலசந்தர்
திரைப்படக் கலைஞர் ராஜேஷ் தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர். கன்னிப்பருவத்திலே, அச்சமில்லை அச்சமில்லை , ஆலய தீபம், சிறை, மக்கள் என் பக்கம், நிலவே மலரே, மகாநதி, சத்யா, ஆட்டோகிராப் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது ஆளுமையை வெளிப்படுத்தியவர். திரைப்பட நுணுக்கங்களை நன்கு அறிந்தவர். கலைமாமணி உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.
சிறந்த உலக சினிமாக்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு வெளிவந்துள்ள இந்த நூல் தமிழ் சினிமாவில் சாதனை புரியும் எண்ணம் கொண்ட புதிய தலைமுறையினருக்கு உத்வேகம் ஊட்டக்கூடியது.