ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது, ரசிப்பது என்பது ஒரு வகை. அப்படத்தின் சிறப்பு அம்சங்களையும், பலவீனங்களையும் பற்றி விமர்சிப்பது என்பது மற்றொரு வகை. இந்த இரண்டாவது வகையான விமர்சிப்பது என்பதுதான் இந்த புத்தகத்தைப் படிப்பதன் மூலம் நமக்கு கிடைக்கின்ற ஒன்றாகும். வாழ்க்கையை அந்த அளவிற்கு நெருக்கத்தில் காட்டுகின்ற ஒரே கலைவடிவம் சினிமா மட்டும்தான். எனவே பார்வையாளர்களின் உணர்வுகளை மிக உயர்ந்த அளவு பாதிக்கக்கூடிய சக்தி சினிமாவிற்கு மட்டுமே உள்ளது. பீத்தோவனையோ, மொஸட்டையோ, பிக்காஸோவையோ, மைக்கலேஞ்லோவையோ, வியானோ டா டாவின்சியைப் பற்றியோ நமது நாட்டு தலைசிறந்த ஓவியர் ரவிவர்மாவைப் பற்றியோகூட தெரியாத மக்கள் இருப்பார்கள். ஆனால் சார்லி சாப்ளினைப் பற்றியோ, புரூஸ்லியைப் பற்றியோ ராஜ்கபூரைப் பற்றியோ, எம்.ஜி.ஆர் பற்றியோ தெரியாதவர்கள் நிச்சயம் இருக்க மாட்டார்கள். புத்தகங்களைப் படிக்காதவர்கள் இசையை விரும்பிக் கேட்காதவர்கள், ஓவியங்களைப் பற்றி தெரியாதவர்கள், நடனக் கலையை ரசிக்காதவர்கள் இருப்பார்கள். ஆனால் தன்னுடைய வாழ்நாளில் சினிமா பார்க்காதவர்கள் நிச்சயமாக இருக்க மாட்டார்கள்.
எல்லா காலங்களிலும், எல்லா கலைகளும் மனிதனைப் பற்றிதான் இருந்திருக்கின்றது. எல்லா கலைகளுக்கும் மூலம் மனிதன்தான். எனவே மனிதனுடைய உணர்வுகள், போராட்டங்கள், வெற்றிகள் போன்றவற்றை மையமாக வைத்து எழுதப்பட்ட கதைகள்தான் காலத்திற்கு நிலைத்து நிற்கும்.
மனிதத்தன்மைகளின் மிக உயர்ந்த உணர்வுகளை சினிமாவில் மட்டுமே காட்ட முடியும். அதுவும் நேரில் பார்க்க முடியாத அளவிற்கு குளோசப்பில் மிகத்தெளிவாகப் பார்க்க முடியும்.
மேலே குறிப்பிட்ட அளவு சக்தி வாய்ந்த இந்த சினிமா உலகம் இன்றுவரை ஆயிரக்கணக்கான திரைப்படங்களை உருவாக்கியுள்ளது. இந்தப் புத்தகத்தில் 17 மேல்நாட்டுத் திரைப்படங்களைப் பார்த்து அந்த படங்களின் கதை, திரைக்கதை, மையக்கருத்து, படத்தின் மூலம் சொல்லப்படும் செய்தி போன்றவற்றை முடிந்த அளவு எழுதியிருக்கிறேன். இதில் தவறுகள் இருந்து அவற்றைச் சுட்டிக்காட்டினால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். அடுத்தப் பதிப்பில் அந்தக் குறைகள் திருத்தப்படும்.
மேலும் இப்புத்தகம் வெளிவர உதவிய எனது மகள் திவ்யாவிற்கு நெஞ்சார்ந்த நன்றி!
திரைப்படக் கலைஞர் ராஜேஷ் தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர். கன்னிப்பருவத்திலே, அச்சமில்லை அச்சமில்லை , ஆலய தீபம், சிறை, மக்கள் என் பக்கம், நிலவே மலரே, மகாநதி, சத்யா, ஆட்டோகிராப் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது ஆளுமையை வெளிப்படுத்தியவர். திரைப்பட நுணுக்கங்களை நன்கு அறிந்தவர். கலைமாமணி உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.
சிறந்த உலக சினிமாக்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு வெளிவந்துள்ள இந்த நூல் தமிழ் சினிமாவில் சாதனை புரியும் எண்ணம் கொண்ட புதிய தலைமுறையினருக்கு உத்வேகம் ஊட்டக்கூடியது.