அதே போன்று தமிழகத்தில் அரசாண்ட முடியுடை மூவேந்தர்கள் காலந்தொட்டு நேற்றைய ஆங்கிலேயர் ஆட்சி வரை நடைபெற்றவற்றை வரலாற்று மதிப்போடு நோக்குகிறோம்.
வரலாற்றுக் களஞ்சியத்தை, பழங்காலச் சம்பவங்களை ஆவலுடன், உணர்ச்சியுடன் படிக்க யாருக்குத்தான் தோன்றாது? பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அரச குடும்பத்து ஏற்றத் தாழ்வுகளையும், காதல் போர்களையும், வளர்ச்சி - அழிவுகளையும், இப்போது படிக்கும்போது, அச்சம்பவங்கள் ஏதோ நம் கண் எதிரே நடைபெறுவன போன்ற பிரமை நமக்கு ஏற்படும்.
விஜயநகரப் பேரரசர்களின் பிரதிநிதிகளாய்த் தமிழகத்தில் ஆட்சிப் புரியத் தொடங்கிய நாயக்க மன்னர்கள் மதுரையையும், தஞ்சையையம் தலைநகர்களாகக் கொண்டிருந்தனர். இரு அரசர்களும் தங்களுக்குள் விரோத மனப்பான்மையை வளர்த்துக் கொண்டனர். அவர்களுள் மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரும், தஞ்சையை ஆண்ட விஜயரகுநாத நாயக்கரும் பெரும் விரோதம் கொண்டிருந்தனர். சொக்கநாத நாயக்கர், தஞ்சை மன்னரின் மகள் மோகனாங்கியை மணக்க விரும்பினார். ஆனால், தஞ்சை மன்னர் அதற்கு இசையவில்லை. கடைசியில் இரண்டு மன்னர்களிடையே போர் ஏற்படுகிறது. போரில் தஞ்சை மன்னர் தோல்வியுறுகிறார். தஞ்சை மாளிகையையும் அவர் தானே அழித்து உயிர் விடுகிறார். இவை வரலாற்று நிகழ்ச்சிகள். வரலாற்று நிகழ்ச்சிகளை அப்படியே கூறுவது சரித்திரப் பாடப் புத்தகம். வரலாற்று நிகழ்ச்சிகளோடு கற்பனை கலந்து எழுதுவது வரலாற்றுப் புதினம்.
வரலாற்றுப் புதினத்தில் எழுதுபவரின் கற்பனை முக்கிய இடம் வகிக்கிறது. அரச குடும்பத்தவர்கள் மட்டுமே பாத்திரங்களாக விளங்குவதில்லை. மன்னருக்கு உதவும் அமைச்சர், தளபதி, விசுவாசமுள்ள படையாட்கள், காவல்காரர்கள், பணிப்பெண்கள், துரோக உள்ளம் படைத்தவர் தொழில் புரிபவர்கள் என்று பல கதைப் பாத்திரங்கள் கதை வளர உறுதுணையாக இருப்பார்கள். வரலாற்று உண்மை நிகழ்ச்சிகளுக்கு மாறுபடாமல் கற்பனையைக் கலந்து - எழுதும்போது ஓர் சுவையான வரலாற்றுப் புதினம் உருவாகிறது.
'வல்லத்து இளவரசி'யை அவ்வாறே உருவாக்கினேன்.
பஞ்சு பழமையானது. அதிலிருந்து நூற்கப்பட்ட நூலைக் கொண்டு நெய்யப்பட்ட ஆடையின் அழுத்தம், தெளிவு, நேர்த்தி இவற்றிற்கு நான் பொறுப்பு.
மோகனாங்கி கதாபாத்திரத்தை எழுதும்போது நான் பாத்திரத்தோடு பாத்திரமாக ஒன்றிவிடுவேன். கதையின் தலைவராக சொக்கநாதர் திகழலாம். ஆனால், துணைப் பாத்திரங்களாகத் திகழ்பவர்கள் இந்த நாவலில் முக்கிய இடம் வகிப்பதைக் காணலாம்.
- விக்கிரமன்