விக்கிரமன் ஐயாவுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது பல சரித்திர, சமூகக் கதைகளுக்கான கருக்கள் உள்ளன. புதினமாக எழுதப்பட வேண்டும் என்பார்.
மறைந்தும் புதைந்தும் கிடக்கும் சரித்திர காலச் சம்பவங்களைக் கதைகளாக வடிப்பதில் கற்பகத்தருவாக விளங்கிய விக்கிரமன் ஐயாவின் மனதில், 'இராசேந்திர சோழரின் இறுதிக்காலம்' பற்றிய நாவலை எழுத வேண்டும் என்ற தீராத வேட்கை எழுந்தது. உலக வரலாற்றில் இராசேந்திர சோழனிடம் இருந்ததைப் போன்ற கப்பற்படை வேறெந்த சக்கரவர்த்திக்கும் இருந்ததில்லை.
வரலாற்றுக் கல்வெட்டுக்களே இதற்கு ஆதாரம்! மாவீரன் அலெக்ஸாந்தரும், மாமன்னர் அசோகச் சக்கரவர்த்தியும் எய்தாத புகழைத் தன் வாழ்நாளில் எய்தியவன் ‘இராசேந்திர சோழன்'. அவனிடம் இருந்த கடற்படையைக் கண்டு வரலாறே வியக்கிறது.
இன்று, இந்தோனேஷியா, மலேஷியா, சிங்கப்பூர், இலங்கை, பர்மா (மியான்மர்), அந்தமான், ஜாவா, இலட்சத்தீவுகள் உள்ளிட்ட பற்பல இடங்களில் தமிழ்மொழி உலவுகிறது என்றால், அது இராசேந்திரசோழனின் கடற்போர்களால் கிடைத்த விளைவு என்பதை மறுப்பதற்கில்லை.
'கடாரம் கொண்டான்' என்ற பட்டப்பெயர் இராசேந்திர சோழனின் மணிமுடியில் பொறிக்கப்பட்ட வைரப் பதக்கம்!
தான் வென்ற தேசங்களையெல்லாம் தமிழ்மொழியால் ஒருங்கிணைந்த ஒப்பற்ற தமிழ்த் தலைவன் இராசேந்திர சோழன்!
விக்கிரமன் ஐயா ஒரு நாள், ‘கங்காபுரிக்காவலன்' நாவலின் இரண்டு பாகங்களில் 'கங்கை கொண்ட சோழபுரம்' உருவான வரலாறு கூறப்பட்டது.
ஆனால், கங்காபுரிக் காவலனின் மூன்றாம் பாகமாக - இராசேந்திர சோழனின் இறுதிக்காலம் பற்றியக் கதையை எழுத வேண்டும்.
அதில், 'கங்கை கொண்ட சோழபுரம்' உருவாகக் காரணமாக இருந்த இளையராணி வீரமாதேவியின் தியாகங்களை எழுத வேண்டும். இவற்றில் பல சுவாரசியமான தகவல்கள் புதைந்துள்ளன. பல திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்துள்ளன.
இதை 'வீரமாதேவி சபதம்' என்ற தலைப்பில் எழுதப் போகிறேன்! என்றார்.
அதன்படியே உதயமானது 'வீரமாதேவி சபதம்!’ 2014 ஆம் ஆண்டு தொடங்கி, 2015-ஆம் ஆண்டு அவர் மறையும் வரையில் - பல நாள்கள் அவர் சொல்லச் சொல்ல எழுதுவதும் என எழுத்துப் பணி தொடர்ந்தது.
எழுதி முடித்த அத்தியாயங்களை விக்கிரமன் ஐயா திருத்தியும், வடிவமைத்தும் வந்தார்.
ஒரு நாள் தன் மகன் கண்ணன் விக்கிரமனிடம் ‘வீரமாதேவி சபதம்' நாவல் தயாராகிவிட்டது. இதை என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்டார், ஐயா!
"நூலாக வெளியிடுவோம் அப்பா!" என்றார் கண்ணன் விக்கிரமன். அவ்வாறு உருவான 'வீரமாதேவி சபதம்' இன்று உங்கள் கரங்களில் தவழ்கிறது.