இச்சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையையும். ஒரு நன்னெறியை உணர்த்தும் வகையில் எழுதியிருக்கிறார் ஆசிரியர். இந்நூலில் 12 சிறுகதைகளும் அடங்கியுள்ளன. அத்தனையும் அரிய முத்துகள். படித்து பயனடையுங்கள்."
எழுத்தாளர் திரு. வி.ர. வசந்தன் அவர்கள் கடந்த 45 ஆண்டுகளாக தமிழ் இலக்கியத் துறையின் பல்வேறு பிரிவுகளில் தமது பங்களிப்பைச் செய்து கொண்டிருப்பவர். தமது இளம் வயதிலேயே குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர். சிறுவர் இலக்கியத்தில் நான்கு முறை தங்கப் பதக்கங்களையும், இரண்டு முறை வெள்ளிப் பக்கங்களையும் பெற்றவர். இதுவரை 150-துக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 7 நாவல்களையும், 2 அறிவியல் நூல்களையும், 2 வாழ்க்கை வரலாறு நூல்களையும், 2 முழு நீள நாடகங்களையும் சிறுவர்களுக்காக எழுதியுள்ளார். இவை நூல்களாக முன்னணி பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளன.
இவரது சிறுகதைகள் கோகுலம் மற்றும் ரத்னபாலா ஆகிய சிறுவர் இதழ்களில் பிரசுரிக்கப்பட்டவையாகும். இவர் எழுதி தங்கப் பதக்கம் பரிசு பெற்ற மலைக்கோட்டை மர்மம், மற்றும் உதயன் எங்கே? என்ற சிறுவர் நாவல்கள் கோகுலத்தில் தொடர்கதைகளாக வெளிவந்தன. கடமை நெஞ்சம் நாவல் தமிழ் சிறுவர் இலக்கியத்தில் முத்திரை பதித்தது. இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளிலும், பொதிகை தொலைக்காட்சியிலும் விமர்சிக்கப்பட்டது.
சிறுவர் இலக்கியம் தவிர்த்து, கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் இலக்கியத் துறையில் சிறுகதைகள் நாவல்கள், குறுநாவல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், மரபுக் கவிதைகள் என பல்வேறு வகைப்பட்ட இலக்கியங்களை படைத்து வருகிறார். தமிழ் மண்ணின் கிராமிய மணம் கமழும் வகையில் அவர் வெளியிட்டிருக்கும் மண் தந்த பண் என்ற நாட்டுப்புறப் பாடல் தொகுப்பு நூல் தமிழறிஞர்களின் வரவேற்பைப் பெற்றது. கருவேல முட்கள், நேர்ச்சைக் கடா என்ற இரு சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். தமிழ் மண்ணோடு ஊறித் திளைத்த பண்பாடுகளும், கிராமிய மண்ணின் மணமும், சாமான்ய மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களும், இவர்தம் கதைகளின் தனிச் சிறப்பு.
கல்கி, ஆனந்த விகடன் போன்ற முன்னணி இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளிவந்திருப்பதுடன், கல்கி சிறுகதைப் போட்டி, கந்தர்வன் சிறுகதைப் போட்டி ஆகியவற்றில் பரிகளும் பெற்றுள்ளன. அமரர் கல்கியின் அழியாத கதைமாந்தர்கள் என்ற உளவியல் ஆய்வு நூல் இவரது சிறந்த படைப்புகளுள் ஒன்றாகும்.
கடந்த 12 ஆண்டுகளாக கதம்பம் என்ற இலக்கிய ஏட்டினை நடத்தி வரும் இவர் அதில் ஏராளமான சிறுகதைகளையும், குறுநாவல்களையும் எழுதி வருகிறார். அவ்விதழில் இவர் எழுதிக் கொண்டிருக்கும் வலங்கையன் வாள் என்ற வரலாற்று நாவல் பலரது பாராட்டையும் பெற்று வருவதுடன், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமது இதழில் பல எழுத்தாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களது இலக்கியப் பயணத்திற்கும் ஆதரவளித்து வருகிறார்.