எழுத்தாளரான வோல்கா, நவீனத் தெலுங்கு இலக்கியத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க நபர்களில் ஒருவராகத் திகழுபவர். அவருடைய எழுத்தில் வெளிவந்துள்ள சுமார் ஐம்பது படைப்புகளில் புதினங்கள், நாடகங்கள், சிறுகதைத் தொகுதிகள், கட்டுரைகள் மற்றும் கவிதைத் தொகுதிகள், மொழிபெயர்ப்புகள் ஆகியவை அடங்கும். வோல்கா தன்னுடைய படைப்புகளுக்காகப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்குப் பல்கலைக்கழகத்திலிருந்து ‘சிறந்த எழுத்தாளர்’ விருது, ரங்கவள்ளி நினைவு விருது, ரமினேனி அறக்கட்டளை விருது, மாலதி சந்துர் விருது, விசால சாஹிதி புரஸ்காரம், சுசீலா நாராயண ரெட்டி விருது, கண்டுகூரி வீராசலிங்கம் இலக்கிய விருது, லோக்நாயக் அறக்கட்டளை விருது, தெற்காசிய லாட்லி ஊடகம் மற்றும் விளம்பர விருது ஆகியவை அவர் பெற்றுள்ள விருதுகளில் சில. ‘விமுக்தா’ என்ற தன்னுடைய புதினத்திற்கு 2015ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி பரிசை அவர் பெற்றார்.