சித்தத்தை சிவன்பால் வைத்து சிந்தித்திருந்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் என்றாலே.... அவர்கள் மாயாவிகள் என்றும் மனம் போன போக்கில் திரிபவர்கள் என்றும் சிலர் எண்ணிக் கொண்டு இருக்கின்றார்கள். அது உண்மையல்ல....!
எல்லோரும் செய்வதை செய்யாமல் தங்களுக்கென ஒரு தனிப் பாதையை வகுத்துக் கொண்டு சமூகத்தோடு முரண் பாடான ஓர் உறவு வைத்திருப்பவர்கள், அறிவு ஞானம் பெற்றவர்கள்.
நீரில் நடப்பது, காற்றில் மிதப்பது என சித்தர்கள் சித்து விளையாட்டுக்கள் பலவற்றை நடத்திக் காட்டியுள்ளனர். பூமிப் பந்தை ஆட்டுவிப்பது, ஒன்பது வகையான கோள்கள்! அதைத்தான் சித்தர்கள் 'நவக்கிரகங்கள்' என்று அன்றே பெயரிட்டு அழைத்தார்கள். மழை வருவதையும், புயல் வரப் போவதையும் முன்கூட்டியே தெரிந்து கொண்டு எச்சரித்தார்கள். மாட்டு மந்தைகள் போலவும், ஆட்டு மந்தைகள் போலவும் வாழும் மனிதர்களை ஓர் ஒழுங்கான வாழ்க்கைக்கும், நோய் நொடியற்ற ஆரோக்கியமான வாழ்விற்கும் தயார் படுத்தவே... சித்தர்கள் ஈசன் அருளால் அவதரித்தவர்கள்.
இதற்காகவே சித்தர்களுக்கு மரணம் இல்லாத வாழ்வைக் கொடுத்த இறைவன்.... அவர்கள் விரும்பும்போது ஜீவ சமாதி அடையவும் அருள் புரிந்தார். இயற்கையை வெல்லும் ஆற்றல் படைத்த சித்தர்களுக்கு ஐந்து தகுதிகளை அவர்களுக்குள்ளே வகுத்து வைத்திருக்கிறார்கள்.
1) சித்தத்தை அடக்கக் கூடியவர்களே சித்தர்கள் என்பது முதல் தகுதி.
2) முற்றும் துறந்தவர்கள்.
3) எட்டு வகையான சித்து விளையாட்டுக்களில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள்.
4) ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் கற்றுத் தேர்ந்து அதன் மூலம் உலகுக்கு நன்மைகளைச் செய்வார்கள்.
5) இந்தப் பிறவியில் பிறப்பு எடுத்ததற்கான காரணத்தை அறிந்திருப்பார்கள். இதன் மூலம் ஐம்புலன்களையும் அடக்கி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள்.
இந்த ஐந்து தகுதிகளையும் அடிப்படையாக வைத்து எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கையில்தான்... இனிமையும், ஏகாந்தமும் இருக்கும் என்பது சித்தர்களின் வாக்கு! உண்மையான பக்தியில் எதிர்பார்ப்பு இருக்காது. சித்தர்கள் எதையும் எதிர்பார்க்காதவர்கள். சித்தர்கள் காலத்துச் செய்திகளுக்கு ஆவணங்களோ, ஆதாரங்களோ அதிகமாகக் கிடைக்கப் பெறவில்லை. வழிவழியாகச் சொல்லப்பட்டு வரும் தகவல்களே இன்று ஆதாரமாக இருக்கின்றன.
முதன்மை சித்தர்கள் பதினெட்டுப் பேர்கள் தான். இந்தப் பதினெட்டு சித்தர்களைத் தவிர வேறு பல சித்தர்களும் நம் தேசத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.
அந்த ஏனைய சித்தர்களைப் பற்றிய தகவல்களை விரிவாகக் காண்போமா?
- லட்சுமி பிரபா