பார்த்தசாரதி கோயிலைச் சுற்றியுள்ள லைட் கம்பங்கள், சுவர்கள் ஆகியவற்றில் ஒவ்வொரு வாரமும் ஏதேனும் கண்ணைப் பற்றிக்கும் விளம்பரப் போஸ்டரோ தட்டியோ தொங்காமல் இருந்ததில்லை. பழனியப்பா டிராவல்ஸ், அருள்ஜோதி டிராவல்ஸ்.... நான்கு நாள் ஷிர்டி பயணம், நவக்கிரகச் சுற்றுலா, பத்ரிநாத், கேதார்நாத் பயணம், நவதிருப்பதிகள் பயணம், மைசூர் -பெங்களூர், கொல்லூர்,... என்று நிறைய நிறைய கவர்ச்சிகள். அதேபோல், பல பத்திரிகைகளில், எண்ணற்ற பயண முகவர்கள் அளிக்கும் விளம்பரங்கள் என்னைச் சுண்டி இழுக்கும். இப்படியெல்லாம் ஊர்கள் உண்டா, நாடுகள் உண்டா, அதன் சரித்திரங்களும் மனிதர்களும் அளிக்கும் ஆச்சர்யங்கள் உண்டா என்று தேடித் தேடி வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது இப்படித்தான். அதுவும் “லோன்லி பிளானட்” புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்த பின்னர், சாலைகள் மட்டுமல்ல சந்துகள் கூட அத்துபடியாகிவிட்டன. ஊர்களின் பெயர்களிலேயே ஊர்களைப் பற்றிய கற்பனைச் சித்திரம் விரியும்.
தமிழில் பயண இலக்கியங்களுக்கு நீண்ட தொடர்ச்சி உண்டு. பயணங்கள் செல்வது எவ்வளவு சுவாரசியமோ, அதேபோல் பயணக் கட்டுரைகள் படிப்பதும் மிகவும் சுவாரசியமானது. பயணத்தின் அனுபவத்தை எழுத்தில் கடத்துவது ஒரு அரிய கலை. அதுவும் எதைச் சொல்லவேண்டும், எதைச் சொல்லக்கூடாது என்பதும் முக்கியம். சொல்வதில் நேர்மை வேண்டும். தனிமனித அனுபவங்களைப் பொதுமைப்படுத்தக் கூடாது. எனக்கு இப்படி நேர்ந்தது என்பதோடு நிறுத்திக்கொள்வது நலம். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற மாதிரி ஒரு சில சம்பவங்களைக் குறிப்பிட்டு ஒரு இடத்தின் வளர்ச்சியையோ தளர்ச்சியையோ சுட்டிக்காட்டி தீர்மானங்களை ஏற்படுத்தும் அபாயம் உண்டு. எந்த இடமும் அதன் உயர்வுதாழ்வுகளோடுதான் இருக்கும். பார்க்கும் பார்வையிலும் கிடைக்கும் அனுபவங்களில் இருந்தும் மனத்துக்குள் இருக்கும் நோக்கங்களில் இருந்துமே பயண எழுத்து புறப்படும். ஒரு இடத்தின் மகிமை, அதன் சரித்திரத்தால் மட்டும் உருவாவதில்லை; அங்கிருக்கும் வாழ்வியல், தற்கால சமூகச் சூழ்நிலை, உயர்வு, தாழ்வு என்று அனைத்து அம்சங்களையும் இணைத்தே இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். ரமணனின் இந்த நூல் இப்படி பலதரப்பட்ட அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.
இந்நூலின் தலைப்பை, “பனிமலைகளின் மடியில்...” என்று மாற்றிவைத்திருக்கலாம். இந்தியாவின் வடகோடியில் உள்ள அனைத்து பனிமலைகளிலும் ஒவ்வொரு கட்டுரையும் ஏறி இறங்குகிறது. கங்கை, பத்ரிநாத், கேதார்நாத், வைஷ்ணோதேவி, ஜம்மு என்று ஈரமும் குளிரும் நிரம்பிய பகுதிகளில் காணப்படும் இந்தியாவின் புராதனப் பெருமைகளை இத்தொகுப்பு தொட்டுக் காட்டுகிறது. ரமணாஸ்ரமம் ஒன்றுதான் தென்னிந்திய கட்டுரை.
இத்தொகுப்பின் முக்கியத்துவமாக இரண்டு விஷயங்களைக் கருதுகிறேன். ரமணன் அழைத்துப் போகும் இடங்களில் பெரும்பாலானவை ஆன்மிகத்துக்கும் பக்திக்கும் பெயர்போனவை. அவற்றை வைத்தே பெரும் வணிக நிறுவனங்களாகவும் ஆகிப்போனவை. ஆனால், துளியும் ஆன்மிகக் கலப்பு இல்லாமல், தெய்வங்களைப் பற்றிய உயர்வு நவிற்சி இல்லாமல், பக்தியின் உன்மத்த நிலைகளைப் பற்றிய கற்பனை விவரணைகள் இல்லாமல், மிக யதார்த்தமாக இருக்கின்றன. இவை அனைத்தும் கலாசார பயணங்கள். இவற்றின் நோக்கம், அங்கிருக்கும் தெய்வங்கள் அல்ல; அவர்களின் அருளும் அற்புதங்களும் அல்ல; இந்தியாவின் தொன்மையான பண்பாட்டைத் தொட்டுக்காட்டுவதே குறிக்கோள். கோயில்களின் வாயிலாகத்தான் இந்தியப் பண்பாடும் மரபுகளும் காப்பாற்றப்பட்டு வந்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால், கடந்த சில பத்தாண்டுகளாக, மனிதர்களின் துக்கங்களை, வேதனைகளை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிவைக்கும் “இன்ஸ்டன்ட் தீர்வு மையங்களாக” ஆன்மிகத் தலங்கள் முன்னிறுத்தப்படுகின்றன. அங்கே போனால் எனக்கு என்ன கிடைக்கும் என்ற லேவாதேவிக் கணக்கு கோயில்களில் எட்டிப் பார்ப்பது, மனித மனத்தின் மிகப் பெரிய சரிவு. பக்தி குறுகிப் போச்சோ என்ற ஐயம் எழாமலில்லை. உண்மையில் இவற்றுக்கு வெளியேதான் ஆன்மிகம் தழைக்கிறது. எதிர்பார்ப்பில்லா தொழுதலை, தொண்டுசெய்தலை அனுமனிடமிருந்து கற்றுக்கொள்வது அவசியம்.
வாசகர்களைக் கைபிடித்து அழைத்துப் போகும் ஆசிரியர், கூடவே அவரைச் சுயமாக சிந்திக்கவைக்கும் சுதந்திரத்தையும் தருகிறார். காட்சிகளை விவரிப்பதன் மூலம், கண்முன்னே சித்திரத்தைத் தீட்டுகிறார். மனிதர்களின் நடமாட்டத்தை, கடைத்தெருக்களை, ஸ்நான கட்டங்களை, கூட வரும் பயணிகளை எல்லோரையும் பாத்திரங்கள் ஆக்கி, உங்களை அவர்களோடு பேசவிடுகிறார். முடிவுகளை எடுக்க அனுமதிக்கிறார்; கருத்துக்களை உருவாக்கிக்கொள்ள உதவுகிறார். அதாவது நீங்கள்தான் பயணம் செல்கிறீர்கள், உங்கள் பயணத்துக்கு ரமணன் ஒரு கேடலிஸ்ட்; ஒரு உதவியாளர்; இடைஞ்சல் தராத ஒரு வழிகாட்டி.
தான் கற்றுக்கொண்டதும் பெற்றுக்கொண்டதும் இதுதான் என்று எதையும் முன்வைக்கவில்லை. மாறாக, நீங்கள் தெரிந்துகொள்ள, அறிந்துகொள்ள வழிவிடுகிறார். நிலவுக்குப் போய்விட்டு வந்து நிலவை விவரித்து, என் அனுபவம், என் ஆனந்தம், என் சாதனை என்று இறுமாப்பு கொள்வது வேறு; நிலவை வாசகர்களுக்கு அனுபவப்பூர்வமாக கொண்டுசேர்ப்பது வேறு. இரண்டாவதை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார் ரமணன். இத்தொகுப்பில் உள்ள பல கட்டுரைகள், “கல்கி” வார இதழில் இடம்பெற்றன என்பது பெருமகிழ்ச்சியளிப்பது.
முன்முடிவுகளின்றி இக்கட்டுரைகளைப் படியுங்கள். ரமணம் சுற்றிக்காட்டும் இடங்கள் உங்களை நிச்சயம் வசீகரிக்கும்.
நேசமுடன்
ஆர்.வெங்கடேஷ்
பொறுப்பாசிரியர் கல்கி